ரெயில்கள் வேகமாக செல்வதற்கு தண்டவாளங்கள் மாற்றி அமைப்பு
திண்டுக்கல் ரெயில் நிலையத்தில், ரெயில்கள் வேகமாக செல்வதற்கு வசதியாக 2 தண்டவாளங்கள் மாற்றி அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது.
சரக்கு ரெயில்கள்
திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் அதிவிரைவு, எக்ஸ்பிரஸ், பாசஞ்சர்கள் என அனைத்து ரெயில்களும் நின்று செல்கின்றன. இதற்கு வசதியாக 5 நடைமேடைகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த 5 நடைமேடைகளிலும் கான்கிரீட் தளத்தில் தண்டவாளம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் அவற்றில் 10 கி.மீ. வேகத்தில் தான் ரெயில்களை இயக்க முடியும்.
இதன் காரணமாக திண்டுக்கல்லில் நிற்காமல் செல்லும் சரக்கு ரெயில்கள் குறைந்த வேகத்திலேயே செல்ல வேண்டியது இருக்கிறது. குறிப்பாக ரெயில் நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தூரத்துக்கு முன்பே வேகத்தை குறைத்து, ரெயில் நிலையத்தை கடந்து 2 கி.மீ. தூரம் சென்ற பின்னரே வேகத்தை அதிகரிக்க முடியும். இதனால் எரிபொருள் செலவு அதிகரிப்பதோடு, ரெயில்களும் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
புதிய தண்டவாளம்
இதனை தவிர்த்து சரக்கு ரெயில்களை வேகமாக இயக்கும் வகையில் 3, 4-வது நடைமேடைகளில் இருக்கும் தண்டவாளங்களை புதிதாக மாற்றி அமைக்கும் பணி கடந்த மாதம் தொடங்கியது.
இதையொட்டி அவற்றில் இருந்த கான்கிரீட் தளம் அகற்றப்பட்டு, ஜல்லிகற்களை பரப்பி அவற்றின் மீது புதிதாக தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த 2 தண்டவாளங்களும் நேற்று முன்தினம் இரவு பயன்பாட்டுக்கு வந்தது.
இதில் வந்தே பாரத் உள்ளிட்ட ரெயில்களை இயக்கி சோதனை செய்யப்பட்டன. அப்போது லேசான அதிர்வு ஏற்படுவது கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று பேக்கிங் எந்திரம் மூலம் தண்டவாளங்களை சரிசெய்யும் பணி நடந்தது.
இதேபோல் 2 தண்டவாளங்களின் நடுவே சுமார் 50 மீட்டர் நீள கால்வாய் கட்டும் பணி பாக்கி இருந்தது. அந்த பணி முடியும் வரை இரவில் மட்டுமே ரெயில்கள் இயக்கப்படும். கால்வாய் பணி முடிந்ததும் பகலிலும் அந்த தண்டவாளங்களில் ரெயில் இயக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.