நெல்லையில் சாலை விபத்துகளை குறைக்க நடவடிக்கை; துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் பேட்டி

நெல்லையில் சாலை விபத்துகளை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் தெரிவித்தார்

Update: 2022-07-06 22:33 GMT

நெல்லையில் சாலை விபத்துகளை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் தெரிவித்தார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் வாகன போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவதற்காக, போக்குவரத்து போலீஸ் பூத் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா மற்றும் ஹெல்மெட், முக கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதில் நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் கலந்து கொண்டு முக கவசம், ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முககவசம், ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களுக்கு அல்வா வழங்கி பாராட்டினார்.

தொடர்ந்து போக்குவரத்து போலீஸ் பூத் மையத்தை துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் திறக்க சென்றார். அப்போது அவர், அங்கு பணியில் இருந்த போக்குவரத்து பெண் போலீஸ் ஏட்டு கவுரியை அழைத்து, அந்த பூத்தை திறக்குமாறு கூறினார். உடனே ஏட்டு கவுரி, போக்குவரத்து போலீஸ் பூத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சாலை விபத்து

நெல்லை மாநகர பகுதியில் சாலை விபத்துகளை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மோட்டார் சைக்கிள்களில் ஹெல்மெட் அணியாமல், கார்களில் சீட் பெல்ட் அணியாமல் விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டிச் செல்வோர் மற்றும் ஓட்டுனர் உரிமம் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் செல்லுதல் போன்ற போக்குவரத்து வழக்குகள் தினசரி 1,200 முதல் 1,500 வரை பதிவு செய்யப்படுகிறது.

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டிச் செல்லப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். இதேபோல் நம்பர் பிளேட் இல்லாமல் வாகனங்களை ஓட்டினாலும், அவை பறிமுதல் செய்யப்படும்.

தனியார் பஸ்கள்

மோட்டார் சைக்கிளை அதிவேகத்தில் ஓட்டி சென்றாலோ, 3 பேர் பயணித்தாலோ பறிமுதல் செய்யப்படும். விதிமுறைகளை மீறி வேகமாக செல்லும் தனியார் பஸ்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

உதவி போலீஸ் கமிஷனர் முத்தரசு, இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து, சப்-இன்ஸ்பெக்டர்கள் பாண்டி, கருத்தப்பாண்டியன், ராபர்ட் டென்சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்