காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழந்து வருகிறது - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழந்து வருகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2022-11-22 01:55 GMT

சென்னை,

வடகிழக்கு பருவழை தொடங்கி பெய்து வரும் நிலையில் கடந்த 17-ந்தேதி வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது.

தென்மேற்கு வங்க கடலில் நிலவுகிற காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு - வடமேற்கு திசையில் தெற்கு ஆந்திரா, தமிழக - புதுச்சேரி கடற்கரை நோக்கி நகர்ந்து இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 5 கி.மீ நகர்ந்து வருகிறது. தற்போது சென்னைக்கு கிழக்கே 160 கி.மீ தொலைவில் மையம் கொணிடிருக்கிறது. இது ஆந்திரா, தமிழக - புதுச்சேரி கடற்கரை நோக்கி நகர்ந்து வருவதாகவும், அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுவிழக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக வட தமிழ்நாடு, புதுச்சேரி, தென் கடலோர ஆந்திரா, ராயலசீமாவில் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்