800 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு
வேலூர் மாவட்டத்தில் இருந்து 800 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திருப்பத்தூர் மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.;
800 வாக்குப்பதிவு எந்திரங்கள்
வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள குடோனில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலின்போது பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வி.வி.பேட் கருவிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் வேலூரில் இருந்து 800 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திருப்பத்தூர் மாவட்டத்துக்கு நேற்று முன்தினம் அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது.
வேலூர் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன் மேற்பார்வையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கு திறக்கப்பட்டன. பின்னர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் 800 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒவ்வொன்றாக லாரியில் ஏற்றப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் திருப்பத்தூர் மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தேர்தல்பிரிவு தாசில்தார் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முதல்நிலை சோதனை
இதுகுறித்து தேர்தல்பிரிவு அதிகாரிகள் கூறுகையில், இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக அடுத்த மாதம் (ஜூலை) 4-ந் தேதி நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பெல் என்ஜினீயர்களால் முதல்நிலை சோதனை செய்யப்பட உள்ளது.
அதன்காரணமாக வேலூர் குடோனில் வைக்கப்பட்டிருந்த 800 எந்திரங்கள் திருப்பத்தூர் மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. வேலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் குடோனில் பாதுகாப்பாக உள்ளன. இந்த எந்திரங்களும் 4-ந் தேதி பெல் என்ஜினீயர்களால் முதல்நிலை சோதனை செய்யப்படும் என்றனர்.