பள்ளிக்கரணையில் பல் மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
பள்ளிக்கரணையில் பல் மருத்துவ கல்லூரியில் பயின்று வந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
மேற்குவங்கமாநிலத்தை சேர்ந்தவர் ஸ்வேதா மிஸ்ரா (வயது 23). இவர் சென்னையை அடுத்த பள்ளிக்கரணை வரதராஜபுரம் 4-வது தெருவில் வீட்டை வாடகைக்கு எடுத்து தனது சகோதரி சினேகா மிஸ்ரா என்பவருடன் வசித்து வந்தார். ஸ்வேதா மிஸ்ரா பள்ளிக்கரணையில் உள்ள தனியார் பல் மருத்துவ கல்லூரியில் 3-ம் ஆண்டு பல் மருத்துவம் படித்து வந்தார். சகோதரி சினேகா மிஸ்ரா பொத்தேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் படித்து வருகிறார். இந்த நிலையில் சினேகா நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் வழக்கம்போல் வீட்டிற்கு வந்து கதவை தட்டியுள்ளார்.
ஆனால் வெகுநேரமாகியும் கதவு திறக்கப்படாததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது, ஸ்வேதா மிஸ்ரா ஜன்னல் கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் பள்ளிக்கரணை போலீசார் விரைந்து சென்று ஸ்வேதா மிஸ்ரா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்வேதா மிஸ்ரா தற்கொலைக்கான காரணம் என்ன? என்பதை குறித்து தங்கை சினேகா மிஸ்ரா மற்றும் அவரது நண்பர்கள் என பலரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை ஆவூர் முத்தையா மேஸ்திரி தெருவைச் சேர்ந்த ஹேமலதா. இவருடைய மகள் சஞ்சனா (வயது 17). ராயபுரம் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில்
சஞ்சனா வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து அறிந்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரித்ததில், சஞ்சனா கைப்பட எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அதில், தனது சாவுக்கு யாருக்கும் காரணம் இல்லை, தன்னை மன்னித்து விடுங்கள் என்று கடிதம் எழுதி இருந்தது. இது குறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.