வங்கி முன்பு ஆர்ப்பாட்டம்; வக்கீல் சகோதரிகள் கைது
மதுரையில் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய வக்கீல் சகோதரிகள் கைது செய்யப்பட்டனர்.;
மதுரை,
மத்திய அரசின் ரூ.10 லட்சம் கோடி வங்கி ஊழலை கண்டித்து மதுரை வில்லாபுரத்தில் உள்ள அரசு வங்கி முன்பு வருகிற 6-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக புதூரை சேர்ந்த வக்கீல் சகோதரிகள் நந்தினி, நிரஞ்சனா ஆகியோர் தெரிவித்து இருந்தனர். அதே போன்று நேற்று காலை அவர்கள் இருவரும் வில்லாபுரம் வங்கி முன்பு வந்தனர். பின்னர் அவர்கள் மத்திய அரசை கண்டித்து பதாகைகளை ஏந்தி, பிரதமருக்கு எதிராக கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தகவல் அறிந்து அவனியாபுரம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்த அவர்கள் 2 பேரையும் கைது செய்ய முயன்றனர். அப்போது போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் வங்கி முன்பு பரபரப்பு ஏற்பட்டது.