மாவட்ட நிர்வாகம் ஒருவார காலத்துக்குள் முடிக்காவிட்டால் ஆர்ப்பாட்டம்

மேல்பாதி கோவில் பிரச்சினையை மாவட்ட நிர்வாகம் ஒருவார காலத்துக்குள் முடிக்காவிட்டால் ஆர்ப்பாட்டம் அனைத்து கட்சி ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு

Update: 2023-06-04 16:55 GMT

விழுப்புரம்

விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆதிதிராவிட மக்கள் வழிபடுவதற்கு தடை விதிக்கப்படுவதால் ஏற்பட்டிருக்கும் பிரச்சினை குறித்து விவாதிக்க விழுப்புரத்தில் அனைத்துக்கட்சிகள் சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. ராமமூர்த்தி தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர்கள் துரை.ரவிக்குமார் எம்.பி., சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் காங்கிரஸ் நகர தலைவர் செல்வராஜ், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் பாபுகோவிந்தராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சவுரிராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ஆற்றலரசு, மனிதநேய மக்கள் கட்சி மாநில செயலாளர் முஸ்தாக்தீன் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், மேல்பாதி கிராமத்தில் வழிபாட்டு சமத்துவத்தை நிலைநாட்டவும், சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கவும், மாவட்ட நிர்வாகம் காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும், இதுசம்பந்தமாக அனைத்துக்கட்சிகளின் பிரதிநிதிகள் நாளை (திங்கட்கிழமை) மாவட்ட கலெக்டரை சந்தித்து மேற்கண்ட கருத்தை வலியுறுத்துவது, சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தி.மு.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிப்பது, மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சினையை ஒரு வார காலத்திற்குள் முடிக்காவிட்டால் அனைத்துக்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் விரைவில் நடைபெறும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்