கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்ட தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், வட்ட தலைவர் மணிமாறன் தலைமையில் ஜெயங்கொண்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகம் முன்பாக நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பிரசார செயலாளர் பொய்யாமொழி முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் ராஜா, செயலாளர் பாக்யராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்ட பிரசார செயலாளர் சிவக்குமார் வரவேற்று பேசினார்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். ஈட்டிய விடுப்பு ஒப்படை செய்ய வேண்டும். மத்திய அரசுக்கு இணையாக அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும். பயணப் படியை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களுக்கு காலதாமதமின்றி பணி வரன்முறை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.