சாலைப்பணியாளர்கள் சங்கத்தினர் வெண்ணிறக்கொடியை ஏந்தி ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைப்பணியாளர்கள் சங்கத்தினர் வெண்ணிறக்கொடியை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டில் சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும், சாலைப்பணியாளர்களாக வேலை பார்த்து இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் விண்ணப்பித்தவர்களுக்கு விரைந்து பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்தொடர்ச்சியாக பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள கோட்டப்பொறியாளர் அலுவலகம் முன்பு வெண்ணிறக்கொடியை ஏந்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் சுப்ரமணியன் தொடக்க உரையாற்றினார். மாநில துணை தலைவர் மகேந்திரன், கோட்ட செயலாளர் சுப்ரமணியன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் குமரி ஆனந்தன் வாழ்த்தி பேசினார். முடிவில் கோட்ட பொருளாளர் கருணாநிதி நன்றி கூறினார்.