சுங்க கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் தேமுதிக ஆர்ப்பாட்டம்..!

தமிழகம் முழுவதும் சுங்க கட்டண உயர்வை கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2023-09-09 07:21 GMT

சென்னை,

தமிழகம் முழுவதும் மொத்தமுள்ள 54 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இரண்டு பிரிவாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதம் குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளுக்கும், செப்டம்பர் மாதம் மீதமுள்ள சுங்கச்சாவடிகளுக்கும் ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்திக்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதித்துள்ளது.

இதன் அடிப்படையில் 2023 ஆம் ஆண்டுக்கான கட்டண உயர்வு தமிழகத்தில் உள்ள 20 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ம் தேதி நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்டது. இந்த கட்டண உயர்வு திண்டுக்கல், திருச்சி, சேலம், மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, தூத்துக்குடி உட்பட 20 சுங்கச்சாவடிகளில் நடைமுறைக்கு வந்தது.

இந்த சுங்கக்கட்டண உயர்விற்குக் கண்டனம் தெரிவித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், சுங்க கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெறவில்லை என்றால், அனைத்து சுங்க சாவடிகளை முற்றுகையிட்டு தேமுதிக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்திருந்தார்.

தமிழகத்தில் சுங்கச்சாவடி கட்டணத்தை தொடர்ந்து உயர்த்தி வரும் மத்திய அரசை கண்டித்து தேமுதிக சார்பில் செப்டம்பர் 9-ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட சுங்கச்சாவடிகள் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் சுங்க கட்டண உயர்வை கண்டித்து கரூர், நெல்லை, வேலூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் தேமுதிக-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்