புதுச்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தமிழ் புலிகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு புதுச்சத்திரம் ஒன்றிய செயலாளர் வீரமணி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் இளமுருகன், அக்பர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொள்கை பரப்பு செயலாளர் மணிமாறன் வரவேற்று பேசினார். இதில் மாநில நிர்வாகி செந்தமிழன் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். அதைத்தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலங்காணி கிழக்கு தெருவில் தெருவிளக்கு மற்றும் குடிநீர் வசதி சரிவர இல்லாததை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. தண்ணீர் பிரச்சினையை தீர்க்க அங்குள்ள பொதுக்கிணற்றை தூர்வாரி மின் மோட்டார் மூலம் பொதுமக்களுக்கு தண்ணீரை வினியோகிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் கதிராநல்லூரில் நடைபெறாத பணிகளுக்கு ஊராட்சி நிதி கையாடல் செய்யப்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் புகார் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் அறிவுத்தமிழன், வினோத் சேகுவாரா, குமரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய பொருளாளர் சந்துரு நன்றி கூறினார்.