மல்யுத்த விளையாட்டு வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகாருக்கு உள்ளான பா.ஜ.க. எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்யக்கோரியும், நீதி கேட்டு போராடும் இந்திய விளையாட்டு வீராங்கனைகளை தாக்கிய டெல்லி போலீசாரை கண்டித்தும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் ஆகியவை சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சிவச்சந்திரன் தலைமை தாங்கினார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அலமேலு, வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாதர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் சசிகலா, சங்கத்தின் மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்திற்கான கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினர். அதைத்தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பிரிஜ் பூஷன் சரண் சிங் எம்.பி.யை கைது செய்யக்கோரியும், மல்யுத்த வீராங்கனைகளை தாக்கிய டெல்லி போலீசாரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் இந்திய மாணவர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் கண்ணன், வாலிபர் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் பிரபு, மாவட்ட குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், செல்வகணபதி, மாதர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் புஷ்பலதா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாதர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராணி நன்றி கூறினார்.