லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து கிருஷ்ணகிரியில் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-01 18:45 GMT

சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்தும், கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் உள்ள சுங்கச்சாவடி முன்பு லாரி மற்றும் மல்டி ஆக்ஸில் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பிரான்சிஸ் சேவியர் தலைமை தாங்கினார். இதில், கிருஷ்ணகிரி டவுன் லாரி மற்றும் மல்டி ஆக்ஸில் உரிமையாளர்கள் சங்க செயலாளர் தண்டபாணி, டெம்போ உரிமையாளர்கள் சங்க தலைவர் டேவிட், ஆலோசகர் ஜெயபிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் பேசுகையில், தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 55 சுங்கச்சாவடிகளில், 29 சுங்கச்சாவடிகளுக்கு கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 32 சுங்கச்சாவடிகளை காலாவதி ஆனதாக தமிழக அரசு கூறி மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. அப்படி இருக்க அந்த சுங்கச்சாவடிகளுக்கும் கட்டணம் உயர்த்தியதை கண்டிக்கிறோம். காலாவதியாக அறிவிக்கப்பட்ட கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும். சென்னை எக்ஸ்பிரஸ்வே நான்கு வழிசாலை, ஒசக்கோட்டை-பாலக்கோடு - தர்மபுரி நான்கு வழிச்சாலை பணிகள் நடக்கிறது. இது பயன்பாட்டுக்கு வந்தால் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி பயனற்ற நிலைக்கு தள்ளப்படும். கட்டண உயர்வால் கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் பாதிக்கப்படுவர். எனவே கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கூறினார். 

மேலும் செய்திகள்