மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ராசிபுரம், எருமப்பட்டி பகுதிகளில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-12-30 19:05 GMT

இலவச வீடுகள்

ராசிபுரம் நகரில் வீடற்ற ஏழை மக்களுக்கு இலவச வீடுகள் வழங்க வேண்டும், பிற்படுத்தப்பட்டோர் காலனி மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும், நகராட்சி மக்கள் பயன்படும் வகையில் நகராட்சி திருமண மண்டபம் கட்ட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ராசிபுரம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர கிளை செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கந்தசாமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் செல்வராசு, பெரியசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் தமிழ்மணி, மாவட்ட குழு உறுப்பினர் ராணி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மாதேஸ்வரன், வெங்கட்ராமன், கண்ணன், செல்லமுத்து, மாதர் சங்க மாவட்ட பொருளாளர் புஷ்பலதா, தொழிற்சங்க தலைவர் சங்கரன், கிளைச் செயலாளர் மீனாட்சி, செந்தமிழ் செல்வி, சேகர், ராணி, பாலு, விஜயந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கைகளை வைத்து கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டங்கள்

இதேபோல் ஆர்.கவுண்டம்பாளையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் காளியப்பன், பட்டணம் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பேரூர் செயலாளர் பன்னீர்செல்வம், ஆர்.புதுப்பாளையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர் துரை, தொட்டியபட்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் நடேசன், அலவாய்ப்பட்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் ரங்கசாமி ஆகியோா் தலைமை தாங்கினர்.

இந்த இடங்களில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலும் அணைப்பாளையம், பொன்பரப்பிபட்டி, சந்திரசேகரபுரம், கண்ணூர்பட்டி கிராம மக்கள் கோரிக்கைகளை முன்வைத்து கையெழுத்து இயக்கம் நடந்தது.

எருமப்பட்டி

எருமப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு செல்வராஜ் தலைமை தாங்கினார். கணேசன் முன்னிலை வகித்தார். இதில் நாமக்கல் அமைப்பு குழுவை சேர்ந்த சிவசந்திரன், ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். ஆா்ப்பாட்டத்தில் எருமப்பட்டியில் பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடத்தில் உள்ள 3 அரசு டாஸ்மாக் கடைகளை ஊருக்கு வெளியில் மாற்ற வேண்டும் எனவும், நாமக்கல் அரசு சுகாதார நிலையத்தில் பொதுமக்களின் வசதிகளுக்கு ஏற்ப அனைத்து நவீன மருத்துவ கருவிகளையும் வழங்கி மருத்துவர்கள் மற்றும் நர்சுகளை நியமிக்க வேண்டும் எனவும், 13 மற்றும் 14, 15 வார்டுகளில் தார் சாலை அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதில் முன்னணி தோழர்கள் கணேசன், ராமதாஸ், பிரபு, ராமச்சந்திரன், ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்