முனீஸ்வரர் சாமி சிலை உடைப்பு
வத்தலக்குண்டுவில், முனீஸ்வரர் சாமி சிலை உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருணாசலபுரம் அருகே, திண்டுக்கல் சாலையில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலை கோவிலை திறக்க பூசாரி கிருஷ்ணன் சென்றார். அப்போது கோவில் முன்பு இருந்த பாண்டி முனீஸ்வரர் சாமி சிலை சேதம் அடைந்திருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். அந்த சிலையின் தலை உடைந்து தொங்கிய நிலையில் இருந்தது. நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலையை சேதப்படுத்தியது ெதரியவந்தது.
இதுகுறித்து வத்தலக்குண்டு போலீசார் மற்றும் கோவில் நிர்வாகிகளிடம் அவர் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் அங்கு வந்து சேதம் அடைந்த சிலையை பார்வையிட்டனர். இதேபோல் கோவில் திருப்பணி குழு தலைவர் மின்னல் கொடி, பா.ஜ.க. கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் தலைமையில் ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் மின்னல்கொடி புகார் செய்தார். அதன்பேரில், சிலையை சேதப்படுத்திய மர்ம நபர் குறித்து அப்பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே சிலையை சேதப்படுத்திய நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், இல்லையெனில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் கோவில் கமிட்டியினர் தெரிவித்துள்ளனர்.