நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 25 வீடுகள் இடித்து அகற்றம்

ஜெயங்கொண்டம் அருகே நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 25 வீடுகளை அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்தை கொண்டு இடித்து அகற்றினர். இதற்கு நஷ்டஈடு கேட்டு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-06-06 17:47 GMT

ஆண்டிமடம்

ஆக்கிரமிப்பு

அரியலூர் மாவட்டம், அய்யப்பநாயக்கன்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட தர்ம சமுத்திரம் கிராமத்தில் உள்ள செங்கால் ஓடை நீர்நிலையை ஆக்கிரமித்து கான்கிரீட் வீடுகள், சிமெண்டு ஓட்டு வீடுகள், கூரை வீடுகள் என 25 வீடுகள் கட்டப்பட்டிருந்தன. இவர்கள் அனைவரும் சுமார் 3 தலைமுறைகளாக வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 25 வீடுகளுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்றுகூடி வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் அதிகாரிகள் வீடுகளை காலி செய்ய அறிவுறுத்தி வீடு வீடாகச் சென்று கூறியுள்ளதாகவும், ஒலி பெருக்கி மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள அறிவிப்பு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடந்த வாரம் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

25 வீடுகள் இடிப்பு

இந்நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, அரியலூர் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், ஜெயங்கொண்டம் தாசில்தார் ஸ்ரீதர் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் மற்றும் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைகதிரவன் தலைமையிலான, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் குணசேகரன், சண்முகசுந்தரம், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் லட்சுமிபிரியா, பாலகிருஷ்ணன், நடேசன், ரமேஷ், புண்ணியகோடி உள்ளிட்ட ஏராளமான போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் என 300-க்கும் மேற்பட்ட போலீசார்கள் அப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருக்கவும், வீடுகளை இடிப்பதற்கு பாதுகாப்பு கொடுத்து பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

வீட்டுமனை பட்டா

இதில் 5 பொக்லைன் எந்திரங்கள் மூலம் 25 வீடுகளும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இடித்து தரைமட்டமாக்கப்பட்ட வீடுகளின் உரிமையாளர்களுக்கு மாற்று இடம் அதே பகுதியில் கோவில் மானியத்தில் தலா ஒரு நபருக்கு 2½ சென்ட் வீதம் 25 பேருக்கும் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால் அதில் உள்ள மரங்களை அப்புறப்படுத்தி கொடுக்காமலே திடீரென நேற்று வீடுகளை இடித்து தரைமட்டமாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், எங்களுக்கு வருகிற 10-ந் தேதி வரை கால அவகாசம் கொடுத்தும், திடீரென நேற்று வீடுகளை அகற்றியுள்ளனர். நாங்கள் தங்குவதற்கும், உணவு சமைப்பதற்கும் இடம் இன்றி தவித்து வருகிறோம்.

கோரிக்கை

மேலும் வருகிற 4 நாட்கள் பலத்த மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அண்மையில் அறிவித்திருந்த நிலையில் மழை வந்தால் நாங்கள் எங்கே தஞ்சம் அடைவது, எப்படி சமைத்து சாப்பிடுவது, எங்கே படுத்து தூங்குவது என்று மிகுந்த வேதனையுடன் கண்ணீர் மல்க தெரிவித்தனர். மேலும் எங்களுக்கு மனை கொடுத்த இடத்தில் உள்ள மரங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும், அப்போதுதான் அந்த இடத்தில் நாங்கள் குடியேற முடியும், இதுசம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் இடத்தினை சுத்தம் செய்து தருமாறும், மேலும் இடித்த வீடுகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். தற்போது தங்குவதற்கு புதிதாக வீடு கட்ட அரசு உதவ வேண்டும் என்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்