சாலையில் சுற்றித் திரிந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண், கணவரிடம் ஒப்படைப்பு
கோவில்பட்டி அருகே சாலையில் சுற்றித் திரிந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண், கணவரிடம் ஒப்படைக்கப்பட்டார்.;
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே தெற்கு ஆரைக்குளம் கிராமத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு பெண் சுற்றித் திரிவதாக பசுவந்தனை போலீசுக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் மற்றும் போலீசார் சென்றனர். அந்தப் பெண்ணை மீட்டு முடுக்குமீண்டான்பட்டியில் உள்ள பெண்கள் மனநல காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அந்தப் பெண் ராமநாதபுரம் மாவட்டம் சின்ன ஏர்வாடியை சேர்ந்த லட்சுமணன் மனைவி கலையரசி (வயது 40) என்பது தெரியவந்தது. இவருக்கு நிதிஷ்குமார் (11) என்ற மகன் இருப்பதாகவும் கூறினார். மனநிலை பாதிக்கப்பட்ட கலையரசி அதற்காக சிகிச்சை பெற்று, மாத்திரை சாப்பிட்டு வந்ததாகவும், கடந்த 10 தினங்களாக அவர் மாத்திரை சாப்பிடவில்லை என்றும் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் அவருடைய கணவரின் செல்போன் எண்ணை பெற்ற மனநிலை காப்பக நிர்வாகி தேன் ராஜா, அவருடைய கணவருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் கலையரசி கணவர் லட்சுமணன் மற்றும் அவருடைய சித்தி விஜயா ஆகியோர் காப்பகத்திற்கு வந்தனர்.
கலையரசி கடந்த 7-ந் தேதி ராமநாதபுரம் மாவட்டம் சித்தன்காடு கிராமத்தில் உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றவர் வீடு திரும்ப வில்லை. அவர் எங்கே செல்வது என்று தெரியாமல் பசுவந்தனை அருகில் உள்ள தெற்கு ஆரைக்குளம் கிராமத்திற்கு வந்ததாக கூறினார்.
கோவில்பட்டி தாசில்தார் சுசிலா, கலையரசியின் ஆதார் மற்றும் அனைத்து ஆவணங்களையும் சோதனை செய்தார். பின்னர் அவரது கணவர் லட்சுமணனுடன் அனுப்பி வைத்தார்.