மழைநீர் புகுந்துவிடுவதால் அவதி புதிய வீடுகள் கட்டித்தர நரிக்குறவர்கள் கோரிக்கை
மழைநீர் புகுந்துவிடுவதால் அவதிப்படுவதால், புதிய வீடுகள் கட்டித்தர நரிக்குறவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம்,
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்திருந்து தங்களது கோரிக்கை மனுக்களை அதிகாரிகளிடம் அளித்தனர்.
சேலம் மின்னாம்பள்ளி திங்கள்சந்தை பகுதியில் வசிக்கும் நரிக்குறவ மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில், மழை காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிடுகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலும் அவதிப்பட்டு வருகிறோம். எனவே, தங்களுக்கு வேறு இடத்தில் வீடுகள் கட்டித்தர வேண்டும், என தெரிவித்துள்ளனர்.
சேலத்தை சேர்ந்த சிவகாமி, பிரகதி, சந்திரா உள்பட 10-க்கும் மேற்பட்ட பெண்கள், தனியார் வங்கியை சேர்ந்த அதிகாரிகள் வாங்கிய கடனை உடனடியாக கட்ட சொல்லி மிரட்டுவதாக கூறி புகார் மனுவை அளித்தனர். அந்த மனுவில், தனியார் வங்கியில் ரூ.50 ஆயிரம் வீதம் 10 பேர் கடன் வாங்கினோம். கொரோனா காலத்தில் 3 மாதங்கள் தவணை தொகை செலுத்தவில்லை. அதன்பிறகு கட்டிய தொகையை வட்டியில் கழித்துவிட்டார்கள். ஆனால் தற்போது கடன் தொகையை கேட்டு அதிகாரிகள் மிரட்டி வருகின்றனர். எனவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியுள்ளனர்.