கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும்-ஜனநாயக மாதர் சங்கம் கோரிக்கை
ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும் என ஜனநாயக மாதர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.;
ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும் என ஜனநாயக மாதர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கலெக்டரிடம் மனு
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் சாந்தி மற்றும் நிர்வாகிகள் கலெக்டர் மதுசூதன்ரெட்டியிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களுக்கு சுற்றுவட்டார கிராம மக்கள் மருத்துவ தேவைக்காக வந்து செல்கின்றனர்.
ஆனால் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மக்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட சேவைகள் வழங்க டாக்டர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் போதிய எண்ணிக்கையில் இல்லை. மேலும் இங்கு எக்ஸ்ரே, ஸ்கேன் போன்ற வசதிகளும் அதற்கான பணியாளர்களும் இல்லை. பாம்புகடி, விஷக்கடி மருந்துகள் உள்ளிட்டவைகளும் இல்லை.
கூடுதல் டாக்டர்கள்
எனவே அவசர தேவைக்கான டாக்டர்கள், செவிலியர்கள் போதிய அளவில் பணி நியமனம் செய்ய வேண்டும். போதிய மருந்துகள் கிடைக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். டாக்டர் பற்றாக்குறையால் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து சிவகங்கை, மதுரை ஆஸ்பத்திரிக்கு கர்ப்பிணிகள் அனுப்பப்படுகின்றனர். இதனால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் ஆரம்ப சுகாதார, துணை சுகாதார நிலையங்களில் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி உள்ளிட்டவைகள் செய்ய வேண்டும்.
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நரம்பியல் துறைக்கு டாக்டர்கள் நியமனம் செய்ய வேண்டும். விபத்து சிகிச்சைக்காக நோயாளியை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பும் நிலையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.