கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற கோரிக்கை -கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை வாகன ஓட்டிகள்-அலுவலர்கள் வாக்குவாதம்

கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றுவது குறித்து கோட்டாட்சியர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் வாகன ஓட்டிகள்-அலுவலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.;

Update: 2023-07-18 21:36 GMT

திருமங்கலம்

கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றுவது குறித்து கோட்டாட்சியர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் வாகன ஓட்டிகள்-அலுவலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

சுங்கச்சாவடி

திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடி கடந்த 13 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. சர்ச்சைக்குரிய இந்த சுங்கச்சாவடியில் தினமும் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. அதாவது விதிமுறைக்கு புறம்பாக திருமங்கலம் நகர் பகுதி அருகில் இருப்பதால் நகர் பகுதியில் இருந்து வரும் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்க கூடாது என அவ்வப்போது பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இந்த விவகாரத்தில் பலமுறை சுங்கச்சாவடி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் சில நாட்கள் கட்டணம் வசூலிக்காமல் விட்டுவிட்டு மீண்டும் கட்டணம் வசூலிப்பதை தொடர்கின்றனர்.

இதனால் உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து திருமங்கலம் பொதுமக்கள், உள்ளூர் வாகன ஓட்டிகள் சார்பாகவும் துணை போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுக்கப்பட்டது.

வாக்குவாதம்

திருமங்கலம் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்த பேச்சு வார்த்தைக்கு பின் கோட்டாட்சியரிடம் பேச்சுவார்த்தை நடத்த பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி நேற்று கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் சாந்தி தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில், திருமங்கலம் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கலந்து கொண்டனர்.

மேலும் சுங்கச்சாவடி அலுவலர்களும் வந்திருந்தனர். அப்போது சுங்கச்சாவடி அலுவலர்கள் தங்களுக்கு இதில் முடிவெடுக்க எந்த அதிகாரமும் இல்லை, திட்ட அலுவலரை அணுகவும் என தெரிவித்தனர். இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கும், அலுவலர்களுக்கும் இடையே கோட்டாட்சியர் முன்பே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்தல் புறக்கணிப்பு

தொடர்ந்து கோட்டாட்சியர் திட்ட அலுவலரிடம் பேசி முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார். அதுவரை திருமங்கலம் பகுதி மக்கள் ஆதார் அட்டை, டிரைவிங் லைசன்ஸ் காண்பித்து செல்லலாம் என கூறினார். இறுதி கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை எனில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாகவும், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டுகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க தயாராக உள்ளதாகவும், கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்