விபத்தில் இறந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தல்
விபத்தில் இறந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பாரிவேந்தர் எம்.பி. வலியுறுத்தினார்.;
இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத்தலைவரும், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யுமான, பாரிவேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பெரம்பலூர் அருகே நேற்று முன்தினம் நடந்த தொடர் சாலை விபத்தில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர் பெரம்பலூர் அரணாரையை சேர்ந்த ராஜேந்திரன், 10 நாட்களில் திருமணம் நடக்க வேண்டிய இளம்பெண் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் 5 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்தில் பலியான 3 பேரின் குடும்பத்தினருக்கும் இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அவர்களது குடும்பத்தினருக்கு அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தவிபத்தில் உயிரிழந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவர் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கியதை தவிர்த்து, இதுவரை 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் இயற்கையாகவோ அல்லது விபத்திலோ மரணம் அடைந்தால், அவர்களுக்கு எவ்வித இழப்பீடும் வழங்கப்பட்டதில்லை என்ற தகவல் மிகவும் வருந்ததக்க ஒன்றாகும். எனவே பெரம்பலூர் உள்பட பல்வேறு விபத்து சம்பவங்களில் உயிரிழந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவர்களின் குடும்பத்தாருக்கு இழப்பீட்டு நிவாரண தொகையும், அவர்களது வாரிசுகளுக்கு அரசு வேலையும் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.