குளக்கரையில் ஏற்பட்ட சேதத்தால் மழைக்காலங்களில் உடைப்பு ஏற்படும் அபாயம்

மடத்துக்குளம் அருகே குளக்கரையில் ஏற்பட்ட சேதத்தால் மழைக்காலங்களில் உடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.;

Update: 2023-09-01 18:50 GMT


மடத்துக்குளம் அருகே குளக்கரையில் ஏற்பட்ட சேதத்தால் மழைக்காலங்களில் உடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மண் அரிப்பு

மடத்துக்குளத்தையடுத்த கொழுமம் சமத்துவபுரத்துக்கு பின்புறம், சங்கராமநல்லூர் செல்லும் சாலை உள்ளது. இந்த வழித்தடத்தில் அமைந்துள்ள குளத்தில் தற்போது அதிக அளவில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்தநிலையில் குளக்கரையில் சில இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்துள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

'இந்த பகுதியிலுள்ள விளைநிலங்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பாசன வசதி பெறும் வகையில் இந்த குளம் அமைந்துள்ளது. குளக்கரையையொட்டி தார்ச்சாலை அமைந்துள்ளது. இந்த சாலை வழியாக தினசரி ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தநிலையில் மழைக்காலங்களில் சாலையின் பக்கவாட்டில் மண் அரிப்பு ஏற்பட்டு குளக்கரை பல இடங்களில் சேதமடைந்துள்ளது. மேலும் அரிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் தற்காலிகமாக மண்ணைப் போட்டு அரண் அமைத்துள்ளார்கள்.

விபத்துகள்

அவ்வாறு கொட்டப்பட்ட மண் சாலையிலும் பரவியுள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. மேலும் அந்த மண்ணில் சீமைக்கருவேல மரங்கள் உள்ளிட்ட புதர்ச்செடிகள் முளைத்துள்ளதால் படிப்படியாக உறுதியிழந்து வருகிறது. வரும் மழைக்காலத்தில் இந்த பகுதியில் உள்ள மண் அரிக்கப்பட்டு கரை உடையும் அபாயம் உள்ளது.

எனவே குளத்தின் கரையில் சேதமடைந்த பகுதிகளை சீரமைக்கவும், கரைகளை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மண் அரிப்பை தடுக்கும் வகையில் சாலையை விட உயரமாக குளக்கரையை அமைக்கவும், சாலை ஓரத்தில் மழைநீர் வழிந்து செல்லும் வகையில் வடிகால் அமைப்பதும் மிகவும் அவசியமாகும். இந்த பகுதியின் முக்கிய நீராதாரமாக உள்ள குளத்தை பாதுகாக்கவும், சாலையில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்