விவசாயிகளின் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - டிடிவி தினகரன்

வேளாண் உற்பத்திப் பொருட்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலையை உருவாக்கிய பெருமை விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனையே சாரும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

Update: 2024-02-09 12:26 GMT

கோப்புப்படம் 

சென்னை,

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

இந்தியாவில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தி விவசாய உற்பத்தியை பெருக்குவதில் முன்னோடியாக திகழ்ந்த விவசாயிகளின் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு மத்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

நாடு சுதந்திரமடைந்த பின்பு இந்தியாவில் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்த நிலை மாறி, வேளாண் உற்பத்திப் பொருட்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலையை உருவாக்கிய பெருமை விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனையே சாரும்.

கிராமப்புற மக்களின் மேம்பாடு, வேளாண் ஆராய்ச்சிகளுக்காக ஏற்கனவே பத்ம ஸ்ரீ, பத்ம பூசன், பத்ம விபூசண் ஆகிய விருதுகளை பெற்றிருக்கும் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் பாரத ரத்னா விருது கூடுதல் பெருமை சேர்த்துள்ளது.

மேலும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணைப்பிரதமரும், சிறந்த நாடாளுமன்றவாதியுமான எல்.கே.அத்வானி, முன்னாள் பிரதமர்கள் சரண்சிங் மற்றும் நரசிம்மராவ் ஆகிய மூவருக்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பது அவர்கள் ஆற்றிய பணிகளை என்றென்றும் நினைவில் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்