சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்வதில் தாமதம்

குளத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்வதில் தாமதம் ஏற்படுவதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

Update: 2023-07-27 18:33 GMT

சார்பதிவாளர் அலுவலகம்

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா அலுவலக வளாகத்தில் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. யஇந்த அலுவலகத்தில் தினமும் சுமார் 100 முதல் 150-க்கும் மேற்பட்ட பத்திரங்கள் பதிவாகி வருகின்றன. இந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் குமாரமங்கலம், கீரனூர், உடையாளிப்பட்டி, மாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மனைகள், வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களாக இந்த அலுவலகத்திற்கு நிரந்தர சார் பதிவாளர் நியமிக்கப்படாத காரணத்தினால் பல்வேறு அலுவலகத்தில் இருந்து கூடுதல் பொறுப்பு அடிப்படையில் சார் பதிவாளர்கள் பணியாற்றி வந்தனர்.

தாமதம்

இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சென்னையிலிருந்து நிரந்தர சார்பதிவாளர் நியமனம் செய்யப்பட்டு அவர் பதவி ஏற்று உள்ளார். இந்தநிலையிலும் பத்திரப்பதிவு செய்வதில் தாமதம் தொடர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதியை சந்திக்கும் நிலை ஏற்பட்டு வருகின்றது.

கடந்த சில மாதங்களாக இந்த அலுவலகத்தில் சர்வர் பிரச்சினை காரணமாக பத்திரப்பதிவு தாமதம் ஆகி வந்தது. இந்த நிலையில் தற்போது பத்திரங்களை சரி பார்ப்பதாக கூறி பத்திரப்பதிவு ேமலும் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் காலை 11 மணிக்கு பத்திரப்பதிவு தொடங்கியும், நிறைவு பெறுவதற்கு இரவு 9 மணி வரை ஆகிறது.

கோரிக்கை

திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து இந்த அலுவலகத்திற்கு வீட்டுக் கடன், அடமான கடன், விவசாய நிலங்கள் மற்றும் வீட்டுமனைகள் பதிவு செய்வதற்காக வருபவர்கள் உணவு அருந்தகூட செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் முதியவர்கள் உடல்நிலை பாதிக்கும் நிலை ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு பத்திரப்பதிவை முறைப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கழிவறை பயன்படுத்த முடியாத நிலை

மேலும் இந்த அலுவலகத்தில் அருகில் பொதுமக்கள் பயன்படுத்தும் கழிப்பறை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் குறிப்பாக பத்திரப்பதிவுக்கு வரும் பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

மாவட்டத்திலேயே மிக அதிக பத்திரப்பதிவு இந்த அலுவலகத்தில் தான் நடைபெறுகிறது. மேலும் பத்திரப்பதிவு கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் இங்கு வருபவர்களுக்கு எந்த ஒரு வசதியும் இல்லை. எனவே இங்கு வருபவர்களுக்கு தேவையான வசதிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்