தூய்மை பணியாளர்களை நியமிப்பதில் காலதாமதம்

நெல்லை மாநகராட்சி கூட்டத்தில், தூய்மை பணியாளர்களை ‘அவுட்சோர்சிங்’ முறையில் நியமிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்.

Update: 2023-07-03 19:37 GMT

நெல்லை மாநகராட்சி கூட்டத்தில், தூய்மை பணியாளர்களை 'அவுட்சோர்சிங்' முறையில் நியமிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்.

மாநகராட்சி கூட்டம்

நெல்லை மாநகராட்சி கூட்டம் நேற்று மைய அலுவலக வளாகத்தில் உள்ள ராஜாஜி மண்டபத்தில் நடைபெற்றது. மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டம் தொடங்கியதும் மேயர் பி.எம்.சரவணன் பேசுகையில், "படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் வேலை வாய்ப்பு முகாம், நான் முதல்வன் திட்டம் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் திட்டம் போன்றவற்றை நடத்த உத்தரவிட்டு இருப்பதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். மேலும் இளைஞர்கள் பயன் அடையும் வகையில், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு பணியிடத்தில் முன்னுரிமை அளிக்கும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. இவ்வாறு இளைஞர்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறன்.

கருணாநிதி நாணயம்

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி அவரது நினைவாக நாணயம் மற்றும் தபால் தலை வெளியிட வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.

இதை தொடர்ந்து கவுன்சிலர்கள் விவாதம் நடைபெற்றது.

சங்கீதா ராதா சங்கர்:-முறப்பநாடு குடிநீர் திட்டத்தில் 41-வது வார்டில் நீர்தேக்க தொட்டி அமைக்க வேண்டும். என்.ஜி.ஓ. 'சி' காலனியில் வால்வு பிரச்சினையால் முழுமையாக குடிநீர் கிடைப்பதில்லை. 5 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. அதை சரி செய்ய வேண்டும்.

வில்சன் மணித்துரை:- நிலைக்குழு கூட்டங்கள் நடத்த பொதுவான ஒரு அறை ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஜெகநாதன்:- 5-வது வார்டு திம்மராஜபுரம் அம்மா உணவகம் பின்புறம் உள்ள கழிவுநீர் ஓடை சேதம் அடைந்து உள்ளது. அதனால் கழிவுநீர் தெருக்களில் ஓடுகிறது. அதை சீரமைத்து தரவேண்டும். வெங்கடேஸ்வரா மேலத்தெரு சாலை, ஆண்டாள் மெயின் தெரு குடிநீர் தொட்டி ஆகியவற்றை சீரமைக்க வேண்டும். கக்கன்நகர் முப்பிடாதி அம்மன் கோவில் தெருவில் மினி உயர் கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும்.

குடிநீர் கட்டணம்

சங்கரகுமார்:- தச்சநல்லூர் மண்டலத்தில் தெருவிளக்குகள் சரியாக எரியவில்லை. குடிநீர் கட்டணம் ரூ.100, ரூ.130, ரூ.140 என வசூலிக்கப்படுகிறது. அதனை ஒரே சீராக ரூ.100 என வசூலிக்க வேண்டும்.

கோகுலவாணி:- சிந்துபூந்துறை மின்தகன மையம் எதிரே தாமிரபரணி ஆற்றங்கரையில் பெரிய மண்டபம், கழிப்பறை வசதி செய்து கொடுக்க வேண்டும்.

அலிஷேக் மன்சூர்:-மேலப்பாளையம் பகுதியில் பிளம்பர்கள் ஆங்காங்கே குழி தோண்டி போடுகிறார்கள். அதனை முறைப்படுத்த வேண்டும்.

உதயநிதி ஸ்டாலின்

சின்னத்தாய்:- 36-வது வார்டு பகுதியில் குப்பைகளை முறையாக அள்ளி அப்புறப்படுத்த வேண்டும். அண்ணாநகர் குடிநீர் பிரச்சினையை தீர்க்க அங்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட வேண்டும்.

அருந்ததியர் மக்களின் மனவலியை வெளி உலகிற்கு தெரியப்படுத்தும் வகையில் மாமன்னன் படத்தில் நடித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பவுல்ராஜ்:- மக்களை தேடி மேயர் என்பதற்கு பதிலாக மக்களை தேடி மாநகராட்சி என்று மாற்ற வேண்டும். தச்சநல்லூர் மண்டலம் 11-வது வார்டு வண்ணார்பேட்டை சாலை தெருவில் புதிய மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் கூடுதல் கட்டிடம் கட்ட ரூ.97½ லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை தொடங்க கொண்டு வந்த தீர்மானத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது 6-வது வார்டு முழுவதும் சாலைகளின் மேற்பரப்பை சுரண்டி புதிதாக சாலைகள் அமைக்க வேண்டும்.

சந்திரசேகர்:- நெல்லை மாநகரில் 11 அம்மா உணவகங்கள் உள்ளன. இதன் செயல்பாடுகளை நிறுத்துவதற்காக பொருட்கள் குறைவாக அனுப்பப்படுகிறது. எனவே இதுகுறித்து உரிய ஆய்வு செய்ய வேண்டும்.

தூய்மை பணியாளர்கள்

இதை தொடர்ந்து பேசிய பெரும்பாலான கவுன்சிலர்கள், தங்களது பகுதியில் குப்பைகளை சேகரித்து அள்ளுவதற்கு தூய்மை பணியாளர்கள் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. எனவே 'அவுட்சோர்சிங்' முறையில் தூய்மை பணியாளர்களை நியமிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் அதனை செயல்படுத்த காலதாமதம் ஆவது ஏன் என்று குற்றம்சாட்டி விவாதித்தனர். அதற்கு மேயர், ஆணையாளர் பதில் அளிக்கையில் விரைவில் அவுட்சோர்சிங் முறையில் தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கூறினார்கள்.

இவ்வாறு விவாதங்கள் நடைபெற்று, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் துணை ஆணையாளர் தாணுமூர்த்தி, மாநகர பொறியாளர் குமரேசன், மாநகர நல அலுவலர் சரோஜா, மண்டல தலைவர்கள் பிரான்சிஸ், கதிஜா இக்லாம் பாசில்லா, ரேவதி பிரபு, மகேஸ்வரி மற்றும் உதவி ஆணையாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்