அவதூறு பேச்சு: சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி, பொதுக்கூட்டத்தில் வருத்தம் தெரிவித்த அதிமுக மாவட்ட செயலாளர்..!

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை அவதூறாக பேசியதற்கு கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு வருத்தம் தெரிவித்தார்.

Update: 2023-10-10 02:50 GMT

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் கடந்த மாதம் 19-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குமரகுரு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசினார் என்று கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் திமுக ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுரு மீது 4 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் குமரகுரு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, முதல்-அமைச்சர், அமைச்சர் குறித்து குமரகுரு எந்த இடத்தில் அவதூறாக பேசினாரோ, அதே இடத்தில் பொதுக்கூட்டம் நடத்தி, அதில் முதல்-அமைச்சர், அமைச்சர் குறித்து ஏற்கனவே பேசிய பேச்சுக்கு நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அதன்பின்னர் அவருடைய முன்ஜாமீன் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.

அதையடுத்து, கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் 9-ந் தேதி (அதாவது நேற்று) அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான கூட்டம் மற்றும் மதுரை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விளக்க பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று மாலை அ.தி.மு.க. கூட்டம் நகர செயலாளர் பாபு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுரு கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

நான் கடந்த அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசுகையில், உதயநிதி ஸ்டாலினை பற்றி தவறாக ஒரு வார்த்தை வந்து விட்டது. தவறான வார்த்தை என தெரிந்தவுடன் நான் பேசிய வார்த்தை தவறு என சமூக வலைத்தளத்தில் வருத்தம் தெரிவித்தேன். அதனை பத்திரிகை மற்றும் தொலைக்காட்சியில் வெளியிட்டுள்ளனர். மேலும் நான் பேசிய வார்த்தை அவர்கள் மனதை புண்படுத்தும் வகையில் இருந்தால் அதற்கு இந்த கூட்டத்தின் மூலம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். எந்த காலத்திலும் நான் பேசும் வார்த்தை மற்றவர்கள் மனது புண்படும் வகையில் இருக்காது. இவ்வாறு அவர் பேசினார்.


Full View


Tags:    

மேலும் செய்திகள்