ஆசனூர் வனப்பகுதியில் புள்ளிமானை வேட்டையாடிய செந்நாய்கள்- சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் வீடியோ
ஆசனூர் வனப்பகுதியில் புள்ளிமானை வேட்டையாடிய செந்நாய்கள்- சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் வீடியோ;
தாளவாடி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், கேர்மாளம் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை, மான், செந்நாய் போன்ற ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது தாளவாடி, ஆசனூர் வனப்பகுதியில் நல்ல மழை பெய்து உள்ளது. இதனால் வனப்பகுதி பசுமையாக காட்சி அளிக்கிறது. இதில் ஆசனூர் வனப்பகுதியில் திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.
இந்த நிலையில் ஆசனூர் வனப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த புள்ளிமானை 7-க்கும் மேற்பட்ட செந்நாய்கள் பார்த்து உள்ளன. இதைத்தொடா்ந்து அந்த செந்நாய்கள் கூட்டம் புள்ளிமானை துரத்த தொடங்கியது. செந்நாய்கள் கூட்டத்தை கண்டதும் புள்ளிமான் வேகமாக துள்ளிப்பாய்ந்து ஓடியது. ஆனால் புள்ளிமானை விடாமல் செந்நாய்கள் துரத்தின. இதனிடையே சாலையை கடந்த புள்ளிமானை செந்நாய்கள் கூட்டமாக சுற்றி வளைத்து கடிக்க தொடங்கின. செந்நாய்களிடம் இருந்து உயிர் பிழைக்க புள்ளிமான் உயரமாக துள்ளிப்பாய்ந்து தப்ப முயன்றது. ஆனால் அதில் ஒரு செந்நாயானது, துள்ளிப்பாய்ந்து தப்பி முயன்ற புள்ளிமானின் காலை வசமாக கவ்வி பிடித்தது. இதனால் செந்நாய்களின் பிடியில் இருந்து புள்ளிமானால் தப்ப முடியவில்லை. பின்னர் அனைத்து செந்நாய்களும் சேர்ந்து புள்ளிமானை வேட்டையாடி கடித்து குதறி கொன்றது. இந்த காட்சியை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களுடைய செல்போனில் வீடியோவாக எடுத்தனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.