தீபாவளி கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றதால் ஈரோடு பஸ்-ரெயில் நிலையங்களில் அலைமோதிய பயணிகள் கூட்டம்
தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றதால் ஈரோடு பஸ், ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றதால் ஈரோடு பஸ், ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
பயணிகள் கூட்டம்
தீபாவளி பண்டிகை நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. சனிக்கிழமையான நேற்று முதல் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதனால் தீபாவளியை கொண்டாடுவதற்காக ஏராளமானோர் மகிழ்ச்சியுடன் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கிறார்கள். தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு செல்ல ஏற்கனவே திட்டமிட்டு இருந்தவர்கள் பஸ், ரெயில்களில் முன்பதிவு செய்து இருந்தனர். இதேபோல் டிக்கெட் கிடைக்காதவர்கள் நேற்று முன்தினம் மாலையில் பஸ்களில் ஏறி சென்றார்கள்.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் விடுதியில் தங்கியிருக்கும் மாணவ-மாணவிகள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றார்கள். இதனால் வெளியூர்களுக்கு இயக்கப்பட்ட பஸ்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
சிறப்பு பஸ்கள்
நேற்று முன்தினம் இரவில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. குறிப்பாக மதுரை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பஸ்களில் கூட்டம் காணப்பட்டது. இதேபோல் நேற்றும் அந்த ஊர்களுக்கு இயக்கப்பட்ட பஸ்களில் கூட்டம் இருந்தது. எனவே பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
குடும்பத்துடன் வெளியூர்களுக்கு செல்ல நினைத்தவர்கள் முன்பதிவு டிக்கெட் கிடைக்காததால் பகல் நேரத்தில் இயக்கப்படும் முன்பதிவு இல்லாத ரெயில்களில் சொந்த ஊர்களுக்கு சென்றார்கள். இதனால் ஈரோடு ரெயில் நிலையத்தில் நேற்று பயணிகள் கூட்டம் அலைமோதியது. முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் ரெயில்களில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.