வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'மிதிலி' புயலாக வலுப்பெற்றது
புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 60-70 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.;
சென்னை,
மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்றது. இது மேலும் வலுப்பெற்று புயலாக உருவாகக்கூடும் என வானிலை மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'மிதிலி' புயலாக வலுப்பெற்றதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது இந்த புயல், ஒடிசா மாநிலம் பாராதீப்பில் இருந்து 200 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.
மேலும் இந்த புயலானது வடக்கு- வட கிழக்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை வங்கதேசத்தின் மோங்கா, கொபுரா கடற்கரை இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுவிழந்து கரையை கடக்கும் என்றும், கரையை கடக்கும்போது மணிக்கு 60-70 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
புயல் காரணமாக தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், வடமேற்கு- வடகிழக்கு வங்கக்கடல், மத்திய வங்கக்கடல் பகுதிகள், ஒடிசா கடலோரம், மேற்கு வங்கம், வங்கதேச கடலோரம், இலங்கை கடலோரம் மற்றும் அதனை ஒட்டியதென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோரம் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் மேல்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.