தமிழகத்தில் கொரோனா பரிசோதனையை தினசரி 11 ஆயிரமாக அதிகரிக்க முடிவு -அமைச்சர் பேட்டி

தமிழகத்தில் கொரோனா பரிசோதனையை 11 ஆயிரமாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Update: 2023-04-07 23:17 GMT

கோவை,

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்து வருகிறது. கடந்த 5-ந்தேதி 4 ஆயிரத்தை தாண்டியும், 6-ந்தேதி 5 ஆயிரத்தை தாண்டியும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

நேற்று கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டியது. இதையடுத்து நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

ஆலோசனை கூட்டம்

இந்தநிலையில் கொரோனா பாதிப்பு தொடர்பாக அனைத்து மாநில சுகாதாரத்துறை மந்திரிகளுடனான ஆலோசனை கூட்டத்துக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்து இருந்தது.

காணொலி காட்சி வாயிலாக நேற்று நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில், மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா பங்கேற்று கொரோனா தடுப்பு முறைகள் குறித்து அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார்.

இதில், தமிழ்நாடு சார்பில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோவை கலெக்டர் அலுவலகத்தில் இருந்தவாறு காணொலி வாயிலாக கலந்துகொண்டார்.

ஆலோசனை கூட்டத்துக்கு பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒத்திகை நிகழ்ச்சி

ஆலோசனை கூட்டத்தின்போது, தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் கடந்த 6-ந்தேதி நிலவரப்படி கொரோனாவுக்கு 273 பேர் வரை பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்தநிலையில், வருகிற 10 மற்றும் 11-ந்தேதிகளில் தமிழ்நாட்டில் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் கொரோனா தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. அப்போது அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள படுக்கை வசதி, மருந்து கையிருப்பு, ஆக்சிஜன் உள்ளிட்டவை கண்காணிக்கப்பட உள்ளன. மாவட்ட கலெக்டர்கள், தங்கள் மாவட்டத்தில் உள்ள மருத்துவ கட்டமைப்புகளை உறுதி செய்வார்கள். பொதுசுகாதார துறை அமைப்பின் மூலம் கொரோனா குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

11 ஆயிரமாக அதிகரிக்க முடிவு

தமிழகத்தில் தற்போது தினமும் 4 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை (ஆர்.டி.பி.சி.ஆர்.) செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இன்று (நேற்று) நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்தியா முழுவதும் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க அறிவுறுத்தினர்.

இதையடுத்து, தமிழகத்தில் சளி, தொண்டை வலி, இருமல் உள்ளிட்ட பாதிப்பு உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, தினசரி கொரோனா பரிசோதனை 4 ஆயிரத்தில் இருந்து 11 ஆயிரமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கிளஸ்டர் பாதிப்பு இல்லை. எனவே, பொதுமக்கள் பெரிய அளவில் அச்சப்பட தேவையில்லை.

நாள்பட்ட சர்க்கரை நோய் பாதிப்பு, ரத்த அழுத்தம், சிறுநீரக பாதிப்பு, இதய நோயாளி கள் ஆகியோர் பொது இடங்களில் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும்.

வீடுகளில் நோட்டீஸ்

கொரோனா பாதித்தவர்கள் 5-6 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நபர்கள் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்படும். அவர்கள் தேவையில்லாமல் வெளியில் செல்லக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சர்வதேச விமான நிலையங்களில் ரேண்டம் முறையில் 2 சதவீதம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்து வருகிறோம். அதை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்