கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல்
நெய்வேலி அருகே நடந்த கிராமசபை கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்;
மந்தாரக்குப்பம்
மயானபாதை ஆக்கிரமிப்பு
நெய்வேலியை அடுத்த வடக்குத்து ஊராட்சியில் பொன்னங்குப்பம் கிராமத்தில் தனி நபர் ஆக்கிரமிப்பில் இருந்த மயான பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரனை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து குறிஞ்சிப்பாடி தாசில்தார் சுரேஷ்குமார், வடக்குத்து ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலை குப்புசாமி, துணைத்தலைவர் சடையப்பன் ஆகியோர் முன்னிலையில் கிராம நிர்வாக அலுவலர் சந்தானகிருஷ்ணன் மற்றும் வட்ட சார் ஆய்வாளர் ஆகியோர் மயான பாதையை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதை அமைத்து கொடுத்தனர்.
கொலைமிரட்டல்
இந்த நிலையில் வடக்குத்து ஊராட்சி பொன்னங்குப்பம் கிராமத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலை குப்புசாமி, துணைத்தலைவர் சடையப்பன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்குமார், கிராம நிர்வாக அலுவலர் சந்தானகிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது அதே கிராமத்தை சேர்ந்த பரமசிவம் மற்றும் இவரது மகன்கள் சந்தோஷ்குமார், சிற்றரசன் ஆகியோர் மயானபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதை வசதி செய்து கொடுத்தது குறித்து கிராம நிர்வாக அலுவலர் சந்தானகிருஷ்ணனை தட்டிக்கேட்டு அவரை அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
போலீசார் விசாரணை
பின்னர் இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் சந்தானகிருஷ்ணன் நெய்வேலி நகர போலீஸ் நிலையத்தில் புகாா் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கிராம சபை கூட்டத்தில் போலீசார் முன்னிலையில் கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.