விவசாயிக்கு கொலை மிரட்டல்:தம்பதி மீது வழக்கு
போடி அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.;
போடி அருகே உள்ள சிலமலை கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்ராம் (வயது 59). விவசாயி. போடி அருகே உள்ள தர்மத்துபட்டி இந்திரா காலனியை சேர்ந்தவர் சுருளிராஜ். இவர்கள் இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் பொன்ராம், சுருளிராஜின் வீட்டிற்கு சென்றார். அப்போது சுருளிராஜ், அவரது மனைவி வனிதாதேவி ஆகியோர் சேர்ந்து பொன்ராமை ஆபாசமாக பேசி, கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பொன்ராம் போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சுருளிராஜ், வனிதாதேவி ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.