ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் - 5 வது நாளாக தொடரும் போராட்டம்
பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி சாவு குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தக்கோரி அவரது உறவினர்களும், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி,
கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி(வயது 17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில், விடுதியில் தங்கி இருந்து 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த சின்னசேலம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ள மாணவியின் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து அவரது பெற்றோர்கள் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் 5 வது நாளாக சடலத்தை வாங்க பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மறுப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதற்கு காரணமானவர்களை கைது செய்யவேண்டும் என்றும் சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தக்கோரி அவரது உறவினர்களும், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.