பங்காரு அடிகளார் மறைவு: தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் அஞ்சலி

பங்காரு அடிகளார் மறைவுக்கு, தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.;

Update:2023-10-20 05:15 IST

மேல்மருவத்தூர்,

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் உடலநலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 82. பங்காரு அடிகளாரை பின்பற்றுபவர்களும் ஆதிபராசக்தி கோயிலின் பக்தர்களும் அவரை 'அம்மா' என்று அழைத்துவந்தனர்.

முன்னதாக கோவில் வளாகத்தில் உள்ள வீட்டில் இருந்தபடியே அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று மாலை 5 மணி அளவில் பங்காரு அடிகளார் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது மரணச் செய்தியை அறிந்து பக்தர்கள் மேல்மருவத்தூரில் தற்போது குவிந்து வருகிறார்கள். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக, அவரது வீட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது. அவருக்கு பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

உலகம் முழுவதிலும் உள்ள பங்காரு அடிகளார் பக்தர்கள் தங்களது அஞ்சலியை இணையதளத்தில் பதிவு செய்தனர். வீடியோ பதிவாகவும் வெளியிட்டு தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

பங்காரு அடிகளாரின் இறுதிச்சடங்கு இன்று (வெள்ளிக்கிழமை) மாலை நடக்கிறது. அவரது உடல் அடக்கம் அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார். இதனிடையே பங்காரு அடிகளாருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் மேல்மருவத்தூர் செல்கிறார்.

இந்நிலையில் பங்காரு அடிகளாரின் உடலுக்கு தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணைநிலை கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அம்மா பங்காரு அடிகளாரின் புரட்சிகரமான சிந்தனைகளை நான் மதிக்கிறேன். அனைத்து பெண்களையும் கோவிலில் பூஜை செய்ய வைத்தவர் அவர். ஞாயிற்றுக்கிழமை தோறும் இலவச மருத்துவ முகாம்களை நடத்தினார். நமது பிரதமரை சந்தித்து பத்மஸ்ரீ விருதினை அவர் பெற்றார். இந்த இழப்பை தாங்கும் சக்தியை நான் உட்பட அவரது பக்தர்களுக்கு இறைவன் வழங்க வேண்டுகிறேன்" என்று அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்