தொழில்நுட்ப காரணங்களைக் கூறி இறப்புச் சான்றிதழ் மறுக்கக் கூடாது: மதுரை ஐகோர்ட்டு

இறப்பு சான்றிதழ் கோரும் போது, இறப்பு சம்பந்தப்பட்ட மாவட்ட எல்லையில் நிகழவில்லை என்பது போன்ற தொழில்நுட்ப காரணங்களை கூறி மறுப்பு தெரிவிக்கக்கூடாது மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது;

Update:2023-11-25 22:41 IST

மதுரை

மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த போதும் பொண்ணு, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் " என் கணவர் கண்ணுசாமி 28.4.2018-ல் கோவை பல்லடத்தில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தார். இது தொடர்பாக நெகமம் போலீஸார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை நகல், கணவரின் பிரேத பரிசோதனை அறிக்கை ஆகியவற்றை இணைத்து கணவரின் இறப்பு சான்றிதழ் கோரி மேலூர் கோட்டாட்சியரிடம் 2019-ல் விண்ணப்பித்தேன்.ஆனால், என் கணவரின் இறப்பு மதுரை மாவட்ட எல்லையில் நடைபெறாததால், இங்கு இறப்பு சான்றிதழ் வழங்க முடியாது என கோட்டாட்சியர் மறுத்துவிட்டார். இதனால் நான் 5.12.2019-ல் அளித்த விண்ணப்பத்தை ஏற்றி என் கணவரின் இறப்பு சான்றிதழ் வழங்க கோட்டாட்சியருக்கு உத்தரவிட வேண்டும்." இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: "மனுதாரின் கணவர் கோவை மாவட்டத்தில் விபத்தில் இறந்துள்ளார். மனுதாரர் மேலூரில் நிரந்தர முகவரியை கொண்டவர். இதனால் அவர் கணவரின் இறப்பு சான்றிதழ் கோரி இங்கு விண்ணப்பித்துள்ளார். இறப்பு சான்றிதழ் கோரும் போது, இறப்பு சம்பந்தப்பட்ட மாவட்ட எல்லையில் நிகழவில்லை என்பது போன்ற தொழில்நுட்ப காரணங்களை கூறி மறுப்பு தெரிவிக்கக்கூடாது. இதனால் மனுதாரருக்கு தாமதம் இல்லாமல், உடனடியாக அவரது கணவரின் இறப்பு சான்றிதழை மேலூர் கோட்டாட்சியர் வழங்க வேண்டும்." இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்