அவினாசியில் பழைய கட்டிடத்தை இடித்த போது சிமெண்டு தூண் விழுந்து வாலிபர் பலியானார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கட்டிடம் இடிக்கும் பணி
திருப்பூர் மாவட்டம் அவினாசி போலீஸ் நிலையம் எதிரில் தனியாருக்கு ெசாந்தமான கட்டிடம் இருந்தது. இந்த கட்டிடம் மிகவும் பழமையானது என்பதால் அதை இடித்து அப்புறப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கட்டிடத்தை இடித்து அகற்றும் பணி 95 சதவீதம் நடந்து முடிந்து இருந்தது.
மீதி கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தும் பணி நேற்று நடந்தது. இதற்காக பொக்லைன் எந்திரம் பயன்படுத்தப்பட்டது. கடைசியாக அங்கிருந்த சிமெண்டு தூண் ஒன்றை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த சின்னதுரை என்பவரது மகன் சிவக்குமார் (வயது 22) சிமெண்டு தூண் மேல் ஏறி, தூணை ஒரு கயிற்றால் கட்டி அதை பொக்லைன் எந்திரத்துடன் இணைக்க முயன்றார்.
வாலிபர் பலி
அப்போது தூண் லேசாக அசைந்துள்ளது. இதனால் அதில் இருந்து குதித்து தப்பிவிட முயன்றபோது அவர் மீது சிமெண்டு தூண் விழுந்தது. இந்த விபத்தில் சிமெண்டு தூணின் அடியில் சிவகுமார் சிக்கிக்கொண்டார். இதனால் அவரால் வெளியே வரமுடியவில்லை. இதில் சம்பவ இடத்திலேயே சிவக்குமார் உயிரிழந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் அவினாசி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிவக்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவினாசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.