மினிலாரி கவிழ்ந்து தொழிலாளி சாவு

சூளகிரி அருகே டயர் வெடித்ததால் மினிலாரி கவிழ்ந்து தொழிலாளி இறந்தார். மேலும் டிரைவர் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-01-03 18:45 GMT

சூளகிரி

சூளகிரி அருகே டயர் வெடித்ததால் மினிலாரி கவிழ்ந்து தொழிலாளி இறந்தார். மேலும் டிரைவர் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

மினிலாரி கவிழ்ந்தது

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து பழங்கள் பாரம் ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று, நேற்று சென்னை நோக்கி சென்றது. இந்த லாரியை, சென்னை மாதாவரத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவர் ஓட்டிச்சென்றார். லாரியில் சென்னை மாதாவரம் பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் 4 பேர் சென்றனர்.

இந்த நிலையில் சூளகிரி அருகே சின்னார் என்ற இடத்தில் சென்றபோது திடீரென மினி லாரியின் டயர் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மினிலாரி நடுரோட்டில் கவிழ்ந்தது. மினி லாரியில் இருந்த பழப்பெட்டிகள் சாலையில் விழுந்ததால் பழங்கள் சிதறின.

தொழிலாளி சாவு

இந்த விபத்தில் மினி லாரியின் மேல்புறம் அமர்ந்து சென்ற தொழிலாளி நாராயணன் (வயது55) என்பவர் கீழே விழுந்து மினிலாரிக்கு அடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் மினி லாரி டிரைவர் பிரபாகரன் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு, சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சூளகிரி போலீசார் விரைந்து வந்து இறந்த தொழிலாளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக, ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் மினிலாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்