லாரி மீது கார் மோதி பெண் உள்பட 2 பேர் பலி
சூளகிரி அருகே லாரி மீது கார் மோதி பெண் உள்பட 2 பேர் பலியானார்கள். மேலும் கணவர் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.;
சூளகிரி:
சூளகிரி அருகே லாரி மீது கார் மோதி பெண் உள்பட 2 பேர் பலியானார்கள். மேலும் கணவர் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
லாரி மீது கார் மோதல்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் காந்தி (வயது49). தச்சுத்தொழிலாளி. இவரது மனைவி நவநீதா (40). காந்தி, தனது மனைவி நவநீதா மற்றும் மகன் கோகுல் (16), மகள் பிரதீபா (18) ஆகியோருடன் காரில், அரியலூாில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றார். பின்னர் நிகழ்ச்சியை முடித்து கொண்டு அவர்கள் மீண்டும் ஓசூர் நோக்கி வந்து கொண்டு இருந்தனர்.
இந்த காரை சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த டிரைவர் தினேஷ் (30) என்பவர் ஓட்டி வந்தார். சூளகிரி அருகே சுண்டகிரி என்ற இடத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணி அளவில் கார் வந்த போது, திடீரென முன்பக்க டயர் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, கார் எதிர் திசையில் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
2 பேர் பலி
மேலும் இந்த விபத்தில் டிரைவர் தினேஷ் (30) மற்றும் காந்தியின் மனைவி நவநீதா ஆகிய 2 பேரும் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காந்தி அவருடைய 2 குழந்தைகள் மற்றும் லாரி டிரைவர் முசிறியை சேர்ந்த பன்னீர்செல்வம் (32) ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவர்கள் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்தில் இறந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
பின்னர் விபத்துக்குள்ளான காரை பொக்லைன் எந்திரம் மூலம் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த விபத்து காரணமாக ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.