துப்பாக்கி உரிமங்களை புதுப்பிக்க காலக்கெடு
தூத்துக்குடி மாவட்டத்தில் துப்பாக்கிகள் உரிமத்தை வருகிற டிசம்பர் 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க காலக்கெடு விதிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் துப்பாக்கிகள் உரிமத்தை வருகிற டிசம்பர் 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க காலக்கெடு விதிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
துப்பாக்கி உரிமம்
தூத்துக்குடி மாவட்டத்தில் வழங்கப்பட்டு இருக்கும் படைக்கல உரிமங்களை வைத்து இருக்கும் அனைத்து உரிமதாரர்களும், உரிமங்களை புதுப்பிக்க வேண்டும். படைக்கல உரிமத்தின் செயல்திறன் வருகிற டிசம்பர் 31-ந் தேதியோடு முடிவடையும் படைக்கல உரிமையாளர்கள் தங்களது ஒற்றைக்குழல், இரட்டைக் குழல் துப்பாக்கி, எஸ்.பி.எம்.எல்., டி.பி.எம்.எல்., ரைபிள், ரிவால்வர் மற்றும் பிஸ்டல் உரிமங்களை 1.1.2023 முதல் 31.12.2027 வரை 5 ஆண்டுகளுக்கு புதுப்பிக்க 2022-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்குள், மாவட்ட கலெக்டருக்கு, உரிய படிவத்தில் புகைப்படம் ஒட்டி மனுக்களை அசல் உரிமத்துடன் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
புதுப்பிக்கும் படைக்கலச் சட்ட உரிமத்திற்கு கட்டணத் தொகையை 02202- Director General of Police (Acct Code: 005500104AB22738) என்ற தலைப்பில் ஏதாவது ஒரு பாரத ஸ்டேட் வங்கி கிளையில் செலுத்தி விண்ணப்பத்தில் ரூ.2 மதிப்புள்ள நீதிமன்ற கட்டண வில்லை ஒட்டி, விண்ணப்பத்தோடு உரிமம், அசல் செலுத்துச்சீட்டுடன் (செலான்) சேர்த்து அனுப்பி வைக்க வேண்டும்.
கட்டணம்
பிஸ்டல், ரிவால்வர் ஆகியவற்றை புதுப்பிக்க ரூ.2,500 கட்டணம் செலுத்த வேண்டும். சென்டர் பயர் ரைபிள் புதுப்பிக்க ரூ.5 ஆயிரமும், 0.22 போர் ரைபிள் மற்றும் தோட்டா ரக துப்பாக்கிகள் புதுப்பிக்க ரூ.2 ஆயிரத்து 500-ம், நிரப்பு ரக துப்பாக்கி, பிரீச் லோடிங் சென்டர் பயர் ரைபிள் புதுப்பிக்க ரூ.2 ஆயிரத்து 500-ம் கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பத்துடன் விண்ணப்பதாரரின் முகவரிக்கான ஆதாரம் மற்றும் புகைப்படம் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். துப்பாக்கி உரிமத்தின் செயல்திறன் டிசம்பர் 31-ந் தேதியுடன் முடிவடையும் துப்பாக்கி உரிமையாளர்கள், டிசம்பர் 31-ந் தேதிக்குள் தங்களது உரிமங்களை புதுப்பிக்க விண்ணப்பிக்க வேண்டும்.
நடவடிக்கை
விண்ணப்பிக்க தவறினால் 2023-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி, தங்களிடம் உள்ள துப்பாக்கியை அருகில் உள்ள போலீஸ் நிலையத்திலோ அல்லது படைக்கல காப்புக்கு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தினரிடமோ ஒப்படைக்க வேண்டும். கொடுக்க தவறினால், படைக்கலச்சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். தாமதமாக பெறப்படும் மனுக்களின் மீது எந்தவித காரணம் கொண்டும் உரிமம் புதுப்பிக்கப்படாது. புதுப்பித்தலுக்கு விண்ணப்பம் செய்யும் காலம் வரை உரிமங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டரால் தணிக்கை செய்யப்பட்டு இருக்க வேண்டும். புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் அனைத்தும் நேரடி பரிசீலனைக்கு பிறகு உரிமதாரருக்கு அத்தியாவசிய தேவையென கருதப்படும் இனங்களில் புதுப்பித்து வழங்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.