குளத்தில் செத்து மிதந்த மீன்கள்

தக்கலை அருகே குளத்தில் செத்து மிதந்த மீன்கள்

Update: 2023-06-11 18:45 GMT

தக்கலை, 

தக்கலை அருகே உள்ள விலவூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாண்டிவிளையில் காஞ்சிரமூட்டுகுளம் உள்ளது. சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்தை அந்த பகுதி பொதுமக்கள் குளிப்பதற்கும், துணிகளை துவைப்பது மற்றும் கால்நடைகளை குளிப்பாட்டுவதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், குளத்தில் பாசிகள் வளராத வண்ணம் பொதுமக்கள் பராமரித்து வருகிறார்கள். இந்த குளத்தில் சுலோபியா, கயலி போன்ற மீன்கள் அதிகளவில் உள்ளன. அவற்றை யாரும் உணவிற்காக பிடிப்பதில்லை. இந்த நிலையில் நேற்று காலையில் குளத்துக்கு குளிக்கச் சென்றவர்கள் மீன்கள் கொத்து கொத்தாக செத்து மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ேமலும், யாராவது விஷத்தை தண்ணீரில் கலந்துவிட்டதால் மீன்கள் செத்தனவோ என பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதனால், அவர்கள் குளத்தில் குளிக்காமல் திரும்பி சென்றனர். மேலும், மீன்கள் செத்து மிதந்ததால் தண்ணீரில் துர்நாற்றம் வீசத்தொடங்கியது. இதுபற்றி பேரூராட்சி தலைவர் பில்கானுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் தக்கலை போலீசாருக்கும், பொதுப்பணித்துறையினருக்கும் தெரிவித்தார். அதன்பேரில் தக்கலை போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு குளத்தில் மீன்கள் செத்து மிதந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே மீன்கள் இறந்ததால் துர்நாற்றம் வீசும் தண்ணீரை வெளியேற்றி குளத்தை தூர்வாரி சுத்தப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்