ஈரோடு கனிராவுத்தர் குளத்தில் மீண்டும் செத்து மிதந்த மீன்கள்தண்ணீர் மாதிரியை அதிகாரிகள் ஆய்வுக்கு எடுத்து சென்றனர்
ஈரோடு கனிராவுத்தர் குளத்தில் மீண்டும் செத்து மிதந்த மீன்கள் தண்ணீர் மாதிரியை அதிகாரிகள் ஆய்வுக்கு எடுத்து சென்றனர்;
ஈரோடு கனிராவுத்தர் குளத்தில் மீண்டும் மீன்கள் செத்து மிதந்ததால், தண்ணீர் மாதிரியை அதிகாரிகள் ஆய்வுக்கு எடுத்து சென்றனர்.
கனிராவுத்தர் குளம்
ஈரோடு மாநகராட்சி 4-வது மண்டலத்துக்கு உள்பட்டது கனிராவுத்தர் குளம். ஈரோடு, சத்தி ரோட்டில் சுமார் 14 ஏக்கர் பரப்பளவில் கனிராவுத்தர் குளம் உள்ளது. பல்வேறு அமைப்புகளின் நிதி உதவியுடன் இந்த குளத்தில் பராமரிப்பு பணிகள் நடந்தது. தற்போது குளம் தூர்வாரப்பட்டு, தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு உள்ளன. மேலும் குளத்தை சுற்றி நடைபாதை அமைக்கப்பட்டு பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்தக் குளத்தில் கடந்த மாதம் 25-ந்தேதி ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன.
இது அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குளத்தில் மீன்கள் செத்து மிதந்ததற்கு, பெரிய சேமூர் பகுதியில் உள்ள சில சாய, சலவை பட்டறைகளில் இருந்து சாயக்கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் நீர்நிலைகளில் திறந்துவிடுவதே காரணம் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குற்றச்சாட்டினர். இதைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் குளத்தில் ஆய்வுசெய்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறிச்சென்றனர்.
செத்து மிதந்த மீன்கள்
இந்த நிலையில் கனிராவுத்தர் குளத்தில் நேற்று முன்தினம் மீண்டும் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. இதைப்பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள்
இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் குளத்துக்கு சென்று ஆய்வு செய்த மாநகராட்சி அதிகாரிகள் குளத்தின் தண்ணீரை ஆய்வுக்காக எடுத்து சென்றனர். இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, 'கடந்த முறை மீன்கள் இறந்தபோதும் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறிச்சென்றனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையில் தற்போது மீண்டும் ஏராளமான மீன்கள் செத்துள்ளன. இதற்கு முக்கிய காரணம் சாயக்கழிவு நீர் கலப்பது தான். கடந்த சில தினங்களுக்கு முன்புகூட சாயக்கழிவுகளை நீர் நிலைகளில் வெளியேற்றிய சில பட்டறைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். எனினும் குளத்தில் மீன்கள் செத்து மிதந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே சாயக்கழிவு நீரை வெளியேற்றும் பட்டறைகள் மீது மாநகராட்சி மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.