பள்ளிபாளையம் அருகே நூல்மில் வேன் மோதி மூதாட்டி பலி-பேத்தியுடன் மளிகை கடைக்கு சென்றபோது பரிதாபம்

Update: 2023-05-08 18:45 GMT

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் அருகே பேத்தியுடன் மளிகை கடைக்கு சென்றபோது நூல்மில் வேன் மோதி மூதாட்டி பலியானார்.

மூதாட்டி

நாமக்கல் மாவட்டம்பள்ளிபாளையத்தை அடுத்த மாதேஸ்வரன் கோவில் பகுதியில் வசித்து வருபவர் சுப்பிரமணி (வயது 70). இவருடைய மனைவி இளஞ்சியம் (65). பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து இந்த தம்பதியின் பேத்தி தேவகி (14), மாதேஸ்வரன் கோவிலுக்கு வந்திருந்தார். நேற்று மூதாட்டி இளஞ்சியம், தனது பேத்தி தேவகியுடன் அருகே உள்ள மளிகை கடைக்கு சென்று கொண்டிருந்தார். அவர்கள் அந்த பகுதியில் பள்ளிபாளையம்-சங்ககிரி சாலையைகடந்தனர்.

வேன் மோதி பலி

அப்போது வேகமாக வந்த தனியார் நூல்மில் வேன் அவர்கள் 2 பேர் மீதும் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு அவர்கள் படுகாயம் அடைந்தனர். சிறிது நேரத்தில் மூதாட்டி இளஞ்சியம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். சிறுமி தேவகி வலியால் துடித்து கொண்டிருந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

உறவினர்கள் ஆத்திரம்

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த இளஞ்சியத்தின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த பகுதியில் திரண்டனர். ஆத்திரமடைந்த அவர்கள் விபத்தை ஏற்படுத்திய வேனை அங்கு கிடந்த கற்கள், கட்டையால் அடித்து நொறுக்கினர். இதில் வேனின் கண்ணாடிகள் உடைந்து சிதறின. இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. தகவல் அறிந்த பள்ளிபாளையம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள், இளஞ்சியத்தின் உறவினர்களை சமாதானப்படுத்தி, அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

டிரைவர் கைது

பின்னர் இளஞ்சியத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேன் டிரைவரான குணசேகரன் என்பவரை கைது செய்தனர்.

பேத்தியுடன் மளிகை கடைக்கு சென்ற மூதாட்டி நூல்மில் வேன் மோதி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்