திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பஸ் மோதி விவசாயி சாவு-தாய்க்கு தீவிர சிகிச்சை
திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பஸ் மொபட் மீது மோதியதில் விவசாயி பலியானார். இவருடைய தாய்க்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எலச்சிபாளையம்:
தனியார் பஸ் மோதியது
திருச்செங்கோடு அருகே உள்ள எலச்சிபாளையத்தை அடுத்த நல்லகுமரன்பாளையத்தை சேர்ந்தவர் ராசம்மாள். இவருடைய மகன் பழனியப்பன் (வயது 54). விவசாயி. இவருக்கு ஜோதி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இந்தநிலையில் நேற்று பழனியப்பன், மரப்பரையில் உள்ள கோவில் கும்பாபிஷேகத்திற்கு தனது மொபட்டில் நேற்று காலை சென்று கொண்டிருந்தார். அவருடன் ராசம்மாளும் உடன் சென்றார்.
எலச்சிபாளையம் பஸ் நிறுத்தத்தில் அவர்கள் சாலையை கடக்க முயன்றனர். அப்போது ராசிபுரத்தில் இருந்து திருச்செங்கோடு நோக்கி சென்ற தனியார் கல்லூரி பஸ் மொபட் மீது மோதியது. இதில் பழனியப்பன், ராசம்மாள் தூக்கி வீசப்பட்டு, படுகாயம் அடைந்தனர்.
விவசாயி பலி
அந்த வழியாக சென்றவர்கள் வலியால் துடித்த தாய், மகனை மீட்டு சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பழனியப்பனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் ராசம்மாளுக்கு முதலுதவி அளித்து, மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த எலச்சிபாளையம் போலீசார் திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பழனியப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பஸ் மோதி விவசாயி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.