குன்னூரில் பகலில் லாரிகள் இயக்க தடை
குன்னூரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பகலில் லாரிகள் இயக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதை கண்டித்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
குன்னூர்,
குன்னூரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பகலில் லாரிகள் இயக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதை கண்டித்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நகராட்சி மார்க்கெட்
குன்னூர் நகராட்சி மார்க்கெட்டில் மளிகை, காய்கறி உள்பட 800-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு பொருட்கள் சமவெளி பகுதியில் இருந்து லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகிறது. கடைகளுக்கு வரும் பொருட்களை ஏற்றி வரும் லாரிகள் வி.பி.தெருவில் நிறுத்தப்பட்டு, அங்கிருந்து பாரம் தூக்கும் தொழிலாளர்கள் மூலம் அந்தந்த கடைகளுக்கு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது.
மேலும் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தினமும் மார்க்கெட்டிற்கு வந்து செல்கின்றனர். இதனால் மார்க்கெட் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதற்கு மார்க்கெட், வி.பி.தெரு சாலையோரத்தில் ஆக்கிரமித்து நடைபாதையில் கடைகள் அமைத்ததே காரணம் ஆகும் என கூறப்படுகிறது. போக்குவரத்து நெரிசலை தடுக்க போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளனர். இருப்பினும், வாகன ஓட்டிகள் சரியாக பின்பற்றுவது இல்லை.
போலீசாருடன் வாக்குவாதம்
இந்தநிலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வி.பி.தெருவில் பகலில் லாரிகள் இயக்க போலீசார் தடை விதித்தனர். இரவு 10 மணியில் இருந்து மறுநாள் காலை 7 மணி வரை மட்டும் லாரியில் இருந்து பொருட்கள், காய்கறிகளை இறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதை கண்டித்து நேற்று பாரம் தூக்கும் தொழிலாளர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மார்க்கெட் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்து உள்ளதால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, அந்த கடைகளை அப்புறப்படுத்தி லாரிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரவு நேரத்தில் பாரம் இறக்குவது சிரமம். 100 தொழிலாளர்கள் உள்ளோம். பகல் நேரத்தில் ஒரு லாரியை மட்டும் வி.பி.தெருவிற்குள் அனுமதித்தால் 2 அல்லது 3 பேருக்கு மட்டுமே வேலை இருக்கும் என்று தொழிலாளர்கள் கூறினர். அதற்கு போலீசார், நகராட்சி தான் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்றும், போலீசார் போக்குவரத்தை மட்டுமே சரிசெய்வார்கள் என்றும் கூறினர்.
தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், போராட்டத்தில் ஈடுபட போவதாக பாரம் தூக்கும் தொழிலாளர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.