மாயமான 3 பேரை 2-வது நாளாக தேடும் பணி தீவிரம்
சிறுமுகையில் பவானி ஆற்றில் மூழ்கி மாயமான 3 பேரை 2-வது நாளாக தேடும் பணி தீவிரமாக நடந்தது.;
மேட்டுப்பாளையம்,
சிறுமுகையில் பவானி ஆற்றில் மூழ்கி மாயமான 3 பேரை 2-வது நாளாக தேடும் பணி தீவிரமாக நடந்தது.
2 பெண்கள் பலி
கோவை மாவட்டம் சிறுமுகை விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 64). வியாபாரி. இவரது மகள் மோனிகா. பாலகிருஷ்ணனின் தங்கை பாக்கியம் நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள எல்.ஆர்.ஜி. நகரில் வசித்து வந்தார். இவரது மருமகள் ஜமுனா. ஜமுனாவின் தந்தை சிறுமுகையில் புதிய வீடு வாங்கினார். அதன் கிரகப்பிரவேசம் நேற்று நடைபெறுவதாக இருந்தது.
இதில் கலந்துகொள்வதற்காக பாக்கியம், ஜமுனா, உறவினர்கள் கஸ்தூரி, சகுந்தலா ஆகியோர் நேற்று முன்தினம் சிறுமுகையில் உள்ள பாலகிருஷ்ணன் வீட்டுக்கு வந்தனர். பின்னர் மாலையில் ஜமுனா, பாக்கியம், கஸ்தூரி, சகுந்தலா ஆகியோர் சிறுமுகை அடுத்த வச்சினம்பாளையம் பம்ப் ஹவுஸ் அருகே உள்ள பவானி ஆற்றுக்கு குளிக்க சென்றனர். அங்கு குளித்து கொண்டிருந்த போது பாக்கியம், ஜமுனா ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். மேலும் ஆற்று வெள்ளத்தில் சகுந்தலா அடித்து செல்லப்பட்டார்.
உடல் கிடைக்கவில்லை
தகவல் அறிந்த சிறுமுகை போலீஸ் இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதய ரேகா, மேட்டுப்பாளையம் மற்றும் கோவை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சகுந்தலாவின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், இருள் சூழ்ந்ததால் தேடும் பணி கைவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகு மூலம் சகுந்தலாவின் உடலை சல்லடை போட்டு தேடினனர். ஆனால், அவரது உடல் கிடைக்கவில்லை. பின்னர் மாலையில் இருள் சூழ்ந்ததால், தேடும் பணி கைவிடப்பட்டது.
2-வது நாளாக தேடும் பணி
அதேபோல் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள உப்பு பள்ளம் பவானி ஆற்றில் நேற்று முன்தினம் கோவையை சேர்ந்த பள்ளி மாணவர்கள் 6 பேர் குளித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. உடனே 4 மாணவர்கள் நீந்தி கரைக்கு வந்து விட்டனர். கவுதம்(15), ஜீவானந்தம்(16) 2 பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.
தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் மற்றும் போலீசார், அன்னூர் தீயணைப்பு வீரர்கள், பரிசல்காரர்கள் உதவியுடன் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 மாணவர்களை நேற்று 2-வது நாளாக தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால், 2 பேரின் உடல்கள் கிடைக்கவில்லை. மாலையில் இருட்ட தொடங்கியதால், தீயணைப்பு வீரர்கள் உடல்களை தேடும் பணியை கைவிட்டனர். மேட்டுப்பாளையம், சிறுமுகையில் பவானி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பெண், 2 மாணவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. இதனால் உறவினர்கள் சோகத்தில் உள்ளனர்.