காதலனுடன் சேர்த்து வைக்க கோரி பள்ளிவாசல் முன் கைக்குழந்தையுடன் பெண் தர்ணாசிதம்பரத்தில் பரபரப்பு
சிதம்பரத்தில் காதலனுடன் சேர்த்துவைக்க கோரி பள்ளிவாசல் முன் கைக்குழந்தையுடன் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;
சிதம்பரம்,
சிதம்பரம் ஆணிகாரன் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் மகள் மகேஸ்வரி என்கிற ஆயிஷா (வயது 22). இவர் நேற்று சிதம்பரம் லப்பை தெருவில் உள்ள பள்ளிவாசல் முன்பு தனது கைகுழந்தை மற்றும் உறவினர்கள் 4 பேருடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுபற்றி அறிந்த சிதம்பரம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனஜா, சப்-இன்ஸ்பெக்டர் பொன்மகரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஆயிஷாவிடம் விசாரணை நடத்தினர்.
முஸ்லிமாக மாறினேன்
அப்போது, நானும் சிதம்பரம் அம்பலத்தாடி தெருவை சேர்ந்த ஆசிப் மகன் பக்கிம் அஸ்லாம் (25) என்பவரும் ஒரு ஆண்டுக்கு மேலாக காதலித்தோம். இந்த நிலையில், நான் கர்ப்பம் ஆனேன். இதுபற்றி பக்கிம் அஸ்லாம் அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தும், அவர்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. இதன் பின்னர் பக்கிம் அஸ்லாம் சொன்னதை கேட்டு, எனது பெயரை ஆயிஷா என்று பெயர் மாற்றி முஸ்லிம் மதத்துக்கு மாறினேன்.
குழந்தை பிறந்தது
இதனிடையே எனக்கு ஆண் குழந்தையும் பிறந்தது. இந்த நிலையில் எனக்கு தெரியாமல், பக்கிம் அஸ்லாமை அவரது குடும்பத்தினர் வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து விட்டனர். அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டால், விரைவில் வந்துவிடுகிறேன் என்று கூறி வந்தார். ஆனால் தற்போது, செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார். இதனால் அவர் எங்கு உள்ளார் என்று தெரியவில்லை, எனவே என்னை அவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கூறினார்.
இதையடுத்து போலீசார், புகார் அளியுங்கள் நடவடிக்கை எடுப்பதாக கூறி அவர்களை மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு ஆயிஷா புகார் ஒன்றை அளித்தார். அதில் எனது கணவரை கண்டுபிடித்து என்னுடன் சேர்ந்து வாழ வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.