கல்யாண சுந்தரர் திருக்கல்யாண உற்சவத்தை காண திருவொற்றியூருக்கு தண்டாயுதபாணி சாமி ஊர்வலம்

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழாவில் கல்யாண சுந்தரர் திருக்கல்யாண உற்சவத்தை காண மண்ணடியில் இருந்து திருவொற்றியூருக்கு தண்டாயுதபாணி சாமியை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

Update: 2023-03-04 06:13 GMT

திருவொற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் உடனுறை தியாகராஜசாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் மாசி பிரம்மோற்சவ விழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று(சனிக்கிழமை) காலை 8 மணியளவில் நடக்கிறது. 41 அடி உயர மரத்தேரில் சந்திரசேகரசாமி திரிபுரசுந்தரி தாயாருடன் எழுந்தருளி மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுப்பார்கள்.

இந்தநிலையில் தேரோட்டத்தின்போது பயன்படுத்தப்படும் தேங்காய் நாரிலான வடக்கயிறு 10 ஆண்டுகள் ஆகிவிட்டதால் பழுதாகி விட்டது.

இதையடுத்து திருவொற்றியூரைச் சேர்ந்த சமூக சேவகரான உத்தண்டராமன் ஏற்பாட்டில் நாகர்கோவிலில் இருந்து ரூ.2 லட்சம் செலவில் 160 அடி நீளம், 5.5 இஞ்ச் அகலமுள்ள 500 கிலோ எடையுள்ள புதிய வடக்கயிறு பிரத்யேகமாக ஒருமாத காலமாக தயாரிக்கப்பட்டு திருவொற்றியூரில் வடிவுடையம்மன் கோவில் வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் வடத்துக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தேரில் பொருத்தப்பட்டது.

விழாவில் கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் 6-ந் தேதி நடக்கிறது. இந்த திருக்கல்யாணத்தை காண 3 நாட்களுக்கு முன்பு சென்னை மண்ணடி, பவளக்கார தெருவில் இருந்து தண்டாயுதபாணி சாமி வருவது வழக்கம்.

அதன்படி நேற்று காலை மண்ணடி பவளக்கார தெருவில் இருந்து வெள்ளி மற்றும் மரத்தேரில் அலங்கரிக்கப்பட்ட பழைய மற்றும் புதிய தண்டாயுதபாணி சாமிகள் ஊர்வலமாக திருவொற்றியூருக்கு வந்தனர். ஊர்வலத்தில் ஏராளமான முருக பக்தர்கள் கலந்து கொண்டனர்

ஊர்வலம் திருவொற்றியூர், தெற்கு மாடவீதியில் உள்ள நகரத்தார் மண்டபத்தில் முடிந்தது. அங்கு 5 நாட்கள் தண்டாயுதபாணி சாமியுடன் தங்கியிருக்கும் நகரத்தார் சமூகத்தினர் அனைவருக்கும் அன்னதானம் அளித்து திருக்கல்யாணம் கண்டு திரும்புவர்.

Tags:    

மேலும் செய்திகள்