கோவில் விழாவில் ஆடல்-பாடலுக்கு அனுமதி

கோவில் திருவிழாவையொட்டி ஆடல்-பாடல் கலைநிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.;

Update: 2023-10-09 20:02 GMT

மதுரை,

பொங்கல் விழா

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா புங்கங்குளத்தை சேர்ந்த பிரதீப், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், எங்கள் ஊரில் உள்ள மந்தையம்மன்-வடக்குவாச்சி அம்மன்கோவில் கமிட்டியில் உறுப்பினராக உள்ளேன். இந்த கோவிலின் புரட்டாசி பொங்கல் விழா கடந்த 3-ந்தேதி தொடங்கி உள்ளது. இந்த விழாவையொட்டி வருகிற 11-ந்தேதி (அதாவது நாளை) இரவு 7 மணி முதல் 11 மணி வரை ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடக்கிறது.

இதற்கு அனுமதி கேட்டு கடந்த மாதம் 11 மற்றும் 29-ந் தேதிகளில் போலீசாரிடம் மனு அளித்தோம். இதுவரை அனுமதி அளிக்கவில்லை. எனவே நாங்கள் திட்டமிட்டபடி ஆடல்-பாடல் கலை நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இதேபோல காசிநாதன் என்பவர் திருமங்கலம் தாலுகா ஜே.ஆலங்குளத்தில் அதே நாளில் நடக்கும் ஆடல்-பாடல் கலை நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆடல்-பாடல் கலைநிகழ்ச்சிக்கு அனுமதி

இந்த மனுக்கள் நீதிபதி இளங்கோவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன.

அப்போது மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் ஆர்.சுந்தர், முத்துமாரி ஆகியோர் ஆஜராகி, மனுதாரர்கள் கிராமத்தில் கலை நிகழ்ச்சி நடத்துவதால் எந்தவித சட்டம்-ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படாது. கோவில் திருவிழாவையொட்டி வழக்கமாக இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதை கருத்தில் கொண்டு தற்போதும் அனுமதி வழங்க வேண்டும் என வாதாடினர்.

விசாரணை முடிவில், மனுதாரர்கள் கிராமத்தில் ஆடல்-பாடல் கலை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்