சேதமடைந்த மதகு ஷட்டரை சீரமைக்க வேண்டும்
மேலப்பிடாகை அருகே சேதமடைந்த மதகு ஷட்டரை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேளாங்கண்ணி:
மேலப்பிடாகை அருகே சேதமடைந்த மதகு ஷட்டரை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மூளை மதகு
கீழையூர் ஒன்றியம் ஏர்வகாடு பகுதியில் உள்ள வெள்ளையாற்றில் இருந்து பிரிந்து காவேரிகொண்டான் ஆறு மடப்புரம், வாழக்கரை, மீனம்பநல்லூர், கருங்கண்ணி, திருப்பூண்டி, மேலப்பிடாகை, காரப்பிடாகை வரை பாசன வாய்க்காலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருக்குவளை- மேலப்பிடாகை செல்லும் சாலையில் மேலப்பிடாகை அருகே மூளை மதகு உள்ளது.
இந்த மதகு வழியாக பாசன நீர் சீராக செல்வதற்கும் மற்றும் தடுப்பதற்கும் ஷட்டர் உள்ளது. ஆனால் தற்போது அந்த ஷட்டர் சேதம் அடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இந்த ஷட்டர் வழியாக காவேரிகொண்டான் ஆற்றில் இருந்து குப்பன் வாய்க்கால் மற்றும் நடுவாய்க்காலுக்கு பாசன நீர் செல்கிறது.
தண்ணீரை தேக்க முடியவில்லை
இந்த வாய்கால்கள் மூலம் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது. ஷட்டர் சேதம் அடைந்ததுள்ளதால் விவசாயத்திற்கு பயன்படுத்தும் தண்ணீரை தேக்கி வைக்கவோ அல்லது வெள்ளகாலங்களில் அதிக தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வெள்ளம் ஏற்படாமல் தடுக்கவோ முடிவதில்லை.
இதனால் விவசாய பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அடுத்த மாதம் (ஜூன்) விவசாயத்திற்கு நீர்பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட உள்ள நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட இடத்தில் உள்ள சேதமடைந்த மதகு ஷட்டரை மாற்றி புதிய ஷட்டர் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.