பயணிகள் நிழலகத்தில் சேதமடைந்த இருக்கைகள்
கொள்ளிடத்தில் பயணிகள் நிழலகத்தில் சேதமடைந்த இருக்கைகளை அகற்றி விட்டு புதிதாக அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொள்ளிடம்:
கொள்ளிடத்தில் பயணிகள் நிழலகத்தில் சேதமடைந்த இருக்கைகளை அகற்றி விட்டு புதிதாக அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பயணிகள் நிழலகம்
சிதம்பரத்தில் இருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் கொள்ளிடம் கடைவீதியில் பயணிகள் நிழலகம் அமைந்துள்ளது. இந்த பயணிகள் நிழலகத்தில் காத்திருந்து மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பஸ்களில் ஏறி சென்றனர்.
இந்த பயணிகள் நிழலகத்தில் பயணிகள் அமர்வதற்காக இரும்பினால் ஆன இருக்கைகள் அமைக்கப்பட்டது. இதில் முதியவர்கள் அமர்ந்திருந்து பஸ்களில் ஏறி சென்றனர். இந்த இருக்கைகள் முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு பெரும் உதவியாக இருந்து வந்தது.
சேதமடைந்த இருக்கைகள்
இந்த நிலையில் கடந்த 1 ஆண்டாக இந்த இருக்கைகள் சேதம் அடைந்து காணப்படுகிறது. அடிப்பகுதி மற்றும் மேல் பகுதியில் உள்ள கை வைக்கும் பகுதி உடைந்துள்ளது. 5 இருக்கைகள் அமர முடியாத அளவுக்கு மிகவும் சேதமடைந்துள்ளது.
இதனால் பயணிகள் நிழலகம் வரும் முதியவர்கள் அமர முடியாமல் நின்று கொண்டே இருக்கும் நிலை உள்ளது.
அகற்ற வேண்டும்
சில நேரங்களில் இருக்கையில் உடைந்த இரும்பு பகுதி பயணிகளின் கை மற்றும் கால்களை கிழித்து விடுகின்றன.
எனவே கொள்ளிடம் பஸ் நிறுத்தத்தில் உடைந்த நிலையில் உள்ள இரும்பு இருக்கைகளை உடனடியாக அகற்றிவிட்டு புதிதாக அமைக்க வேண்டும் என்று பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.